நாயகனாக நடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணா இப்போது வில்லன் கதாபாத்திரங்களையும் ஏற்கிறார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜோஷ்வா' படத்தில் இவர்தான் வில்லனாம்.
கௌதம் படம் என்பதால் எதுகுறித்தும் யோசிக்காமல் நடிக்க ஒப்புக்கொண்டதாகச் சொல்பவர், கௌதம் படத்தில் வில்லனும்கூட அழகன்தான் என்கிறார்.
அண்மைய சில மாதங்களாக 'ஜோஷ்வா' படப் பணிகளில் ஈடுபட்டு வந்தாலும் அது குறித்து கிருஷ்ணா அதிகம் பேசவில்லை. இவரது நெருங்கிய சில நண்பர்களுக்கு கூட வில்லன் வேடத்தில் நடிப்பது தெரியாதாம்.
படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியான பிறகு பலரும் தொடர்புகொண்டு 'நீங்களா வில்லன்?' என ஆச்சரியப்படுவதாக சொல்லிச் சிரிக்கிறார்.
"கௌதம் சாரைப் பல ஆண்டுகளாக அறிவேன். என்னுடைய நண்பர் செந்தில் வீராசாமி அவரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றினார். நண்பனைப் பார்க்கப் போவதாகச் சொல்லிக்கொண்டு அடிக்கடி கௌதம் சார் படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்குச் செல்வேன்.
"என்றேனும் ஒருநாள் அவர் படத்தில் நடிக்க அழைப்பார் என்ற நம்பிக்கை இருந்தது. ஒருகட்டத்தில் நானே அவரிடம் நேரடியாக வாய்ப்பு தருமாறு கேட்டேன். நிச்சயம் தருவதாக கூறினார். அது இப்போது நடந்திருக்கிறது," என்கிறார் கிருஷ்ணா.
சில மாதங்களுக்கு முன்பு திடீரென தொடர்புகொண்டு பேசிய கௌதம், நேரில் வருமாறு கூறினாராம்.
அதன்படி சென்று சந்தித்தபோது வில்லனாக நடிக்கத் தயாரா, கதையை விரிவாகச் சொல்லட்டுமா? என்று அவர் கேட்டபோது, 'அதெல்லாம் தேவையில்லை. உங்களை நம்பி வருகிறேன்' என்றாராம் கிருஷ்ணா.
"உடனே என்னைக் கட்டித் தழுவி நன்றி சொன்னார். என்னைச் சகோதரராக கருதும் அவர்மீது பெரிய மரியாதையும் நம்பிக்கையும் உள்ளது. இந்த உணர்வு எப்போதும் மாறாது.
"வில்லனாக நடிப்பது பற்றி அண்ணன் விஷ்ணுவர்த்தனிடம் மட்டும் தகவல் சொன்னேன். நல்ல வாய்ப்பு என்று உற்சாகப்படுத்தினார். இதற்கு முன்பு 'நிபுணன்' படத்தில் வில்லனாக நடித்ததற்கு காரணம் அந்தக் கதை எனக்குப் பிடித்திருந்தது. இப்போது கதை கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு கௌதம் சார்தான் காரணம்," என்று சொல்லும் கிருஷ்ணா, படப்பிடிப்பின்போது கௌதம் அனைவருக்கும் முழு சுதந்திரம் கொடுத்தது தம்மை ஆச்சரியப்படுத்தியதாகச் சொல்கிறார்.
முதல்நாள் படப்பிடிப்பின்போது இப்படி நடிக்கலாமா, இப்படிப் பேசலாமா என கௌதமிடம் பலவிதமான சந்தேகங்களை எழுப்பினாராம்.
ஆனால் அவரோ 'எப்படித் தோன்றுகிறதோ அதைச் செய்தால் போதும் என்றும், ஏதேனும் மாற்றம் தேவையென்றால் மட்டும் சொல்வதாகவும் கூறினாராம்.
"இப்படியொரு இயக்குநரை நான் பார்த்ததில்லை. கௌதம் சார் படத்தில் நாயகன், நாயகி மட்டுமல்ல, வில்லனும்கூட அழகாகக் காட்சி தருவார். இதில் எனக்கு ரவுடித்தனம் உள்ள கதாபாத்திரம். நாயகன் வருணும் நானும் அடிக்கடி மோதிக்கொள்வோம்.
"வருண் பார்ப்பதற்கு திடகாத்திரமான உடல்வாகும் நல்ல உயரமும் கொண்டவர். என்னை அண்ணா என்றுதான் கூப்பிடுவார். பதிலுக்கு நான், 'உன்னையே அண்ணாந்து பார்த்துதான் பேசவேண்டி உள்ளது. கிருஷ்ணா என்றே கூப்பிடு' என்று கலாட்டா செய்வேன்.
"ஆனால் வருணுக்கு இணையாக என்னையும் அழகாக கம்பீரமாக காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குநர். அதற்காக தனிப்பட்ட வகையில் நன்றி சொல்லவேண்டும்," என்று சொல்லும் கிருஷ்ணா, சினிமாவைக் கடந்து தமக்கு வேறு எதுவும் தெரியாது என்கிறார்.
திரைத்துறையில் நுழைந்திருக்காவிட்டால் தனது வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை என்றும் மிகத் தாமதமாக நடிக்க வந்தது வருத்தமளிப்பதாகவும் கூறுகிறார்.
"சில ஆண்டுகளுக்கு முன்பே நடிகனாகி இருந்தால் சில தவறுகளை முன்பே புரிந்து கொண்டிருப்பேன். இன்னும் கொஞ்சம் வேகமாக முன்னேறி இருப்பேன்.
"இப்போது சற்றே பின்தங்கி இருக்கிறோம் என்று தோன்றுகிறது. அது வருத்தமும் தருகிறது.
"எனினும் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதும் நல்லதுதான். இல்லையெனில் வாழ்க்கை சுவாரசியமாக இருக்காது.
"எடுத்த எடுப்பிலேயே உச்சத் துக்குப் போய்விட்டால் தவறுகளைத் தெரிந்துகொள்ளவும் அவற்றைத் திருத் திக்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்காமல் கூட போய்விடலாம்.
"அந்த வகையில் எனக்கு திருப்தி உள்ளது. என் தரப்பில் இருந்த சில தவறுகளைத் திருத்திக்கொண்டேன். தொடர்ந்து என் நடிப்பால் ரசிகர்களை மகிழ்விப்பேன்," என்கிறார் கிருஷ்ணா.

