கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பல்வேறு தரப்பினரும் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். திரைக் கலைஞர்களின் பங்களிப்பும் முக்கியமானது.
ஆதரவற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் உணவு அளிப்பது, பண உதவி செய்வது என்று நடிகர், நடிகையர் செய்து வரும் உதவிகள் குறித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான தகவல்கள் வெளிவருகின்றன.
அந்த வகையில் நடிகை அதிதி ராவ் கொவிட்-19 நோய்க்கு சிகிச்சை பெற பணமின்றித் தவிக்கும் ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
தன் பங்குக்கு சிலருக்கு நிதியுதவி அளித்துள்ள அவர் தற்போது சில அமைப்புகளுடன் இணைந்து நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
"டெல்லியைச் சேர்ந்த பல ஏழைகள் பொருளாதார சூழ்நிலை காரணமாக சிகிச்சை பெற முடியவில்லை. அவர்களிடம் மருந்து வாங்கவோ, மூன்று வேளை உணவுக்கோ பணமின்றித் தவிக்கின்றனர்.
"எனவே முதற்கட்டமாக சில ஏழைகளுக்கு உதவி செய்யும் பொருட்டு முப்பது லட்சம் ரூபாய் நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
"டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஏராளமானோர் கிருமித்தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஏழ்மை நிலையில் உள்ள நோயாளிகளை அடையாளம் காணும்படி மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.
"அனைவரும் இயன்ற பங்களிப்பை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்," என தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதிதி ராவ்.
திரைக் கலைஞர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய ரசிகர்களும் கொவிட்-19 விவகாரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்.
நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் ஏற்கெனவே ஏழ்மை நிலையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருவது தெரியும்.
தற்போது வட சென்னை பகுதியில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கும் ஏழைக் குடும்பங்களுக்கும் தினமும் உணவு விநியோகிக்கும் நல்ல காரியத்தை சூர்யாவும் அவரது ரசிகர்களும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
தொடர்ந்து நூறு நாட்களுக்கும் மேலாக இந்த நெகிழ வைக்கும் நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது.
இதுவரை சுமார் 30 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்.
கொரோனா விவகாரம் முடிவுக்கு வந்தாலும், இந்த ஏழை மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் வரை இந்த உதவி நீடிக்கும் என சூர்யாவின் ரசிகர்கள் தெரிவித்துள்ளார்.
தமது ரசிகர்களின் இந்த சமூகப் பொறுப்புணர்வும் உதவியும் சூர்யாவையும் நெகிழ வைத்துள்ளது.
இதற்கிடையே நடிகர் அர்ஜுனின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனியார் மருத்துவமனையில் ஐஸ்வர்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

