'மக்கள்செல்வி' என சினிமா வட்டாரங்களில் அடையாளப்படுத்தப்படும் வரலட்சுமி சரத்குமார், தான் ஏற்கிற கதாபாத்திரங்களைப் போல துணிச்சலானவர். மனதில் பட்டதை பட்டென்று பேசிவிடுபவர் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.
சமூகத்தின் அழகிய நிகழ்வுகளை மனமுவந்து பாராட்டும் 'வரு' என்ற வரலட்சுமி சரத்குமார், சமூக அவலங்களை கடுமையாக விமர்சிக்கவும் தயங்குவதில்லை.
இதற்கான அண்மைய உதாரணமாக, தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சிறுமி பாலியல் துன்புறுத்தலால் கொல்லப்பட்ட நிகழ்வுக்கு கண்டனத்தை தெரிவித்ததோடு, "நாமெல்லாம் கொரோனா வந்து சாக தகுதியுடையவர்கள்தான்" என தன் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தினார்.
மகளிர் பிரச்சினைகளுக்காக உதவ 'சேவ் சக்தி' என்கிற அமைப்பை நிறுவி உதவி வரும் வரலட்சுமி, அண்மையில் சொந்த மாநிலத்துக்கு ரயிலில் சென்ற தொழிலாளர்களுக்கு, தன் அமைப்பின் மூலம் சோறும் நீரும் வழங்கினார்.
"அரசாங்கத்தை மட்டுமே குறைசொல்லக்கூடாது. மக்களும் சுயமுயற்சியோடு இருந்தால்தான் கொரோனா உள்ளிட்ட விஷயங்களில் வெற்றிகாண முடியும்," என்கிற நடைமுறை யதார்த்தத்தையும் அப்போது சுட்டிக்காட்டினார் வரு.
இப்படி சமூக சேவையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதுடன் சில புதிய முயற்சிகளையும் இவர் சொந்த வாழ்வில் மேற்கொள்கிறார். மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய போதுமான நிதி வேண்டுமே?
அதற்காக சினிமாவில் சம்பாதிப்பது போக, நவீன பேக்கரி ஒன்றை தொடங்கி இருக்கிறார். மிக விலையுயர்ந்த இந்த பேக்கரியின் கேக்குகளை முன்கூட்டியே ஆர்டர் செய்து மட்டுமே பெற முடியும். இப்படி பம்பரமாக இயங்கிக் கொண்டிருக்கும் வரலட்சுமியின் நடிப்பில் விரைவில் வெளியீடு காண்கிறது 'டேனி' திரைப்படம்.
தஞ்சாவூர் கிராமம் ஒன்றில் இயங்கும் காவல் நிலையம்தான் 'டேனி' படத்தின் கதைக்களம். அங்கு நடந்த ஒரு கொலையைத் துப்பறியும் காவல்துறை அதிகாரியாக வரலட்சுமி நடித்துள்ளார். அவருடன் 'பிங்கி' என்ற நாயும் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளது. அந்த நாயின் பெயர்தான் டேனி.
இந்த வழக்கை விசாரிக்கும்போது வரும் இடைஞ்சல்களை எல்லாம் சமாளித்து, குற்றவாளி யார் என்பதை வரு கண்டுபிடிப்பதுதான் கதை.
இப்படத்தில் நாய்க்குட்டியுடன் நடித்ததுதான் தமக்கு மிகவும் பிடித்த விஷயம் என்கி்றார் வரலட்சுமி. இது மிக அழகான கதை என்றும் தேவையின்றி எந்தவொரு அம்சமும் சேர்க்கப்படவில்லை என்றும் பாராட்டுகிறார்.
"ஒரு காட்சியைக் கூட இது தேவையற்றது, நன்றாக இல்லை என யாரும் விமர்சிக்க இயலாது. அந்தளவு நேர்த்தியாக படமாக்கி உள்ளார் இயக்குநர்.
"படப்பிடிப்பு தளத்தில் டேனியைப் பார்த்த உடனேயே அதைக் கட்டியணைத்தேன். அந்தளவு ஈர்த்துவிட்டது. அதன் மீது அளவுகடந்த பாசம் வைத்துவிட்டேன். தன்னுடைய காட்சி எடுக்கப்பட்டதும் அழகாக அதன் இருக்கையில் அமர்ந்து கொள்ளும். நமக்கு இது கேமரா, படப்பிடிப்பு என்றெல்லாம் புரியும். ஆனால், டேனியோ பல டேக்குகளை வாங்காமல் பயிற்சியாளர் என்ன சொல்கிறாரோ அதைச் சரியாக செய்தது," என்று பாராட்டுகிறார் வரலட்சுமி.
தமிழில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் நிறைய வருகிறதே?
"முன்பு வராது. இப்போது வருகிறது. தமிழ் சினிமா எப்போதுமே கொஞ்சம் பின்னோக்கித் தான் இருக்கும். மாற்றத்துக்கு மறுத்தால் நாம் இன்னும் பின்னோக்கிச் சென்றுவிடுவோம். மாற்றம் வரும்போது நாமும் அதோடு மாற பழகிக் கொள்ள வேண்டும்."
கதாநாயகர்களின் படங்கள் நன்றாக வியாபாரம் ஆகிறது. நாயகிகளுக்கு அத்தகைய முக்கியத்துவம் இல்லையே?
"இதற்காக யாரையும் குற்றம் சொல்ல முடியாது. ஹாலிவுட், பாலிவுட்டில் எல்லாம் நாயகியை மையப்படுத்திய படம் என்றெல்லாம் கிடையாது. அங்கு அனைத்துமே படம்தான்.
'மக்கள் செல்வி' பட்டம் குறித்து?
'மக்கள் செல்வி' என்று கீர்த்தி சுரேஷை அழைத்து வருவதாகச் சொன்னார்கள். இது தொடர்பாக விசாரித்தபோது, மக்கள் செல்வி என்ற பட்டத்தை யாருமே யாருக்கும் கொடுக்கவில்லை என்று தெரிந்துகொண்டேன். என்னைப் பொறுத்தவரை எனது சினிமா வாழ்க்கையைத் தவிர, பல பேருக்கு உதவி மற்றும் சேவை செய்து வருவதால் மக்கள் செல்வி பட்டத்தை எனக்குப் பல்வேறு அமைப்பினர் இணைந்து கொடுத்தார்கள். அந்த அன்புக்காக இதை ஏற்றுக்கொண்டேன்," என்று தெளிவாகவும் திட்டவட்டமாகவும் பேசுகிறார் வரலட்சுமி.

