இந்தித் திரையுலகில் தம்மைப் பணியாற்ற விடாமல் ஒரு கும்பல் தடுத்து வருவதாக ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார். நல்ல படைப்புகளில் பணியாற்றுவதை தாம் எப்போதும் தவிர்ப்பதில்லை என அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்திப் படம் ஒன்றில் பணியாற்றும் அவர் விதியின் மீது தமக்கு நம்பிக்கை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
"சிலர் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் இந்த தவற்றைச் செய்துகொண்டிருக்கிறார்கள். பரவாயில்லை, எனக்கு விதியின் மீது நம்பிக்கை இருக்கிறது. அனைத்தும் இறைவனிடம் இருந்தே வருகிறது என்று நம்புபவன் நான். தேடி வரும் படங்களுக்கு நான் இசையமைக்கிறேன். அனைவரையுமே நான் வரவேற்கிறேன்," என்று ரகுமான் மேலும் தெரிவித்துள்ளார்.
தனக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் யார் என்பது குறித்து அவர் தகவல் எதையும் குறிப்பிடவில்லை.

