கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்த கையோடு படப்பிடிப்பைத் தொடங்க கோடம்பாக்கத்தினர் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
ஒன்றிரண்டு மாதங்களுக்குள் பிரச்சினை முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையில் புதுப்படங்கள் குறித்த அறிவிப்புகளும் வெளிவரத் துவங்கியுள்ளன. அந்த வகையில் சில நாயகிகள் நடிக்க உள்ள படங்கள் குறித்துப் பார்ப்போம்.
நடிகை ரித்திகா சிங் அடுத்து விஜய் ஆண்டனி ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை பாலாஜி குமார் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'இறுதிச்சுற்று' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரித்திகா. குத்துச்சண்டை வீராங்கனையான இவருக்கு அப்படத்தில் ஏற்ற கதாபாத்திரம் கச்சிதமாகப் பொருந்தியது. முதல் படத்திலேயே தேசிய விருதைப் பெற்ற அவர், தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.
ரித்திகா நடிப்பில் அண்மையில் வெளியான 'ஓ மை கடவுளே' படம் வசூல், விமர்சன ரீதியில் பலத்த வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இளையர்கள் மத்தியில் ரித்திகாவின் நடிப்புக்கு பாராட்டு கிடைத்தது.
இந்நிலையில் அரவிந்த்சாமியுடன் 'வணங்காமுடி', அருண் விஜய்யுடன் 'பாக்ஸர்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருபவர், அடுத்து விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகி உள்ளார்.
இன்ஃபினிட்டி பிலிம்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் தன் இயல்புக்கேற்ப துருதுரு பெண்ணாக நடிக்க இருப்பதாகச் சொல்கிறார் ரித்திகா. இப்படம் குறித்து அதிக தக வல்கள் மிக விரைவில் வெளியாகுமாம்.
அனுஷ்காவின் திருமணம் எப்போது நடக்கும், மணமகன் யார் எனும் விவாதத்தை ரசிகர்கள் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர். அனுஷ்காவும் அடுத்தடுத்து படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கில் இரண்டு புதுப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ள அவர், தமிழில் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளாராம். இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனுஷ்கா ஒப்பந்தமாகி உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.
இப்படத்தை ஏ.எல். விஜய் இயக்குவதாகவும் கூறப்பட்டது. இதனால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகமடைந்தனர். சேதுபதியும் அனுஷ்காவும் திரையில் போட்டி போட்டு நடிப்பார்கள் என்பதால் இப்படம் ரசிகர்களுக்குப் பெரிய விருந்தாக அமையும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் இத்தகவல் உண்மையல்ல என்று வேல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்கள் நிறுவனத்துக்காக அனுஷ்கா ஒரு படத்தில் நடிப்பது உண்மைதான் என்றாலும், அதை இயக்குவது கௌதம் மேனன் என்றும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை என்றும் வேல்ஸ் நிறுவனம் தெளிவுபடுத்தி உள்ளது.
இதனால் சேதுபதி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே 'கடைசி விவசாயி', 'மாமனிதன்', 'லாபம்', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'துக்ளக் தர்பார்', தெலுங்கு, இந்தியில் தலா ஒரு படம் என ஒரே சமயத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி.
எனவே இவற்றுள் ஏதோ ஒரு படத்தில் அவருடன் அனுஷ்கா ஜோடி சேர்வார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
'சுல்தான்' படத்தில் நடித்துவரும் ராஷ்மிகா மந்தனா அடுத்து விஜய்யுடன் இணைந்து நடிப்பதாக நீண்ட காலமாகக் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விஜய் படத்துக்காக அடுத்தாண்டு ஜூலை மாதம் முதல் ராஷ்மிகா கால்ஷீட் ஒதுக்கி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோல் கார்த்தி நடிக்கும் புதுப்படத்தில் ரகுல் பிரீத்சிங் ஒப்பந்தமாகி உள்ளதாகவும், நடிகர் ஆதி சொந்தமாக தயாரித்து நடிக்கும் படத்தில் அவரது ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நடிகை திரிஷா பிரபல இயக்குநரின் படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பேசிவரும் நிலையில், இத்தகவல்களை சம்பந்தப்பட்ட தரப்பைச் சேர்ந்தவர்கள் இன்னும் உறுதி செய்யவில்லை என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.

