'பிக்பாஸ்' நிகழ்ச்சி குறித்து நடிகை ஓவியா சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருப்பது புது சர்ச்சையையும் விவாதங்களையும் ஏற்படுத்தி உள்ளது.
அந்த நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டுமா? என்று தமது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார் ஓவியா.
'பிக்பாஸ்' நிகழ்ச்சி தமிழகம் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
கடந்த காலத்தில் ஓவியாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். சினிமா மூலம் கிடைக்காத பேரும் புகழும் அவருக்கு இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்தது.
'பிக்பாஸ் சீசன் 4' மிக விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்நிலையில் அந்நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும் என்பதை நீங்கள் ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா? என ஓவியா கேள்வி எழுப்பியிருப்பது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் இருவிதமாகப் பதிலளித்துள்ளனர்.
"நீங்கள் பிரபல நடிகையாக இருப்பதால்தான் அந்த நிகழ்ச்சியில் உங்களைப் பயன்படுத்திக் கொண்டனர்," என்று தடைக்கு ஆதரவாக ஒரு தரப்பினர் பதிவிட்டுள்ளனர்.
மற்றொரு தரப்போ, "பிக்பாஸ் நிகழ்ச்சியால்தான் நீங்கள் பிரபலமானீர்கள். அதை மறந்துவிட்டு அந்நிகழ்ச்சிக்கு எதிராகப் பதிவிடுவது சரியல்ல," என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படியொரு கேள்வியை தாம் முன்னிறுத்தியது ஏன்? என்பது குறித்து ஓவியா ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். அதில், இத்தகைய போட்டி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியைப் பிரபலப்படுத்த வரம்பு மீறிச் செயல்படுவதாக அவர் மறைமுகமாக சாடியுள்ளார்.
"அதிக விளம்பரங்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக நிகழ்ச்சியில் அதிகப்படியான பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள். போட்டியாளர்களை உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு ஏற்பாட்டாளர்கள் தொல்லை செய்யக்கூடாது என்பதற்காகவே என் கருத்தை வெளிப்படுத்துகிறேன்.
"போட்டியில் பங்கேற்பாளர்களும் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்பு விதிமுறைகளை நன்கு அறிந்துகொள்ள வேண்டும்," என்றும் ஓவியா தமது பதிவில் அறிவுறுத்தி உள்ளார்.
ஓவியாவின் இந்தப் பதிவு குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அவருக்குச் சில தரப்பினர் வேண்டுமென்றே நெருக்கடி கொடுத்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்ற போட்டியாளர்கள் சிலரும் தங்கள் மனக்குமுறல்களை வெளிப்படுத்தி இருப்பதை ஓவியா ஆதரவாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

