ரசிகர்களின் ஆதரவும் பாராட்டும்தான் மிகப்பெரிய விருதுகள் என்கிறார் தமன்னா.
பல வெற்றிப் படங்களிலும் நல்ல கதாபாத்திரங்களில் நடித்த போதும் கூட தமக்கு உரிய விருதுகள் கிடைக்கவில்லை என்று அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் யாரையும் நேரடியாக குற்றம்சாட்டவில்லை என்றாலும், திறமை இருந்தும் தாம் விருதுக் குழுக்களால் பலமுறை புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக தமது ஆதங்கத்தை தமன்னா வெளிப்படுத்தி உள்ளார்.
விருதுகள் கொடுப்பதில் தமக்குப் பலமுறை அநியாயம் நடந்துள்ளது என்றும் பகிரங்கமாகச் சாடிஉள்ளார்.
தமன்னாவுக்கு இப்போதெல்லாம் அதிக வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றும் எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் நடிக்க அவர் தயாராக இருப்பதாகவும் அண்மையில் ஒரு தகவல் பரவியது. இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்தார் தமன்னா.
தன் கைவசம் உள்ள படங்கள், அடுத்து நடிக்க உள்ள படங்கள் குறித்து மேலோட்டமாக சில விவரங்களையும் வெளியிட்டார்.
இந்நிலையில் இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்துக்குப் பிறகு திரையுலகில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் செலுத்துவதாகவும் வெளியில் இருந்து வரும் நடிகர், நடிகைகளின் வாய்ப்புகளை அவர்கள் தடுப்பதாகவும் விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.
விருதுகளைக்கூட வாரிசு நடிகர், நடிகைகளுக்குத்தான் கொடுக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. தமன்னாவும் இதனை ஆமோதித்துள்ளார். இதையடுத்து அவருக்கு ஆதரவு, எதிர்ப்பு என ரசிகர்கள் இரண்டாகப் பிரிந்து கிடக்கிறார்கள்.
இந்நிலையில், விருதுகளைவிட ரசிகர்களின் பாராட்டையும் கைதட்டல்களையும்தான் அதிகம் நேசிப்பதாக தமன்னா கூறிஉள்ளார்.
"விருதுகள் கொடுப்பதில் எனக்கு பல தடவை அநியாயம் நடந்துள்ளது. அதை நிச்சயம் சொல்லித்தான் ஆக வேண்டும். பலமுறை முக்கியமான விருதுகளுக்கு எனது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் ஒருமுறைகூட விருது பெறுபவர்களின் பட்டியலில் எனது பெயர் இடம்பெறவில்லை," என்கிறார் தமன்னா.
விருதுகள் தராமல் திறமையான நடிகர், நடிகைகளை யாராலும் எளிதில் ஒதுக்கிவிட முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், நடப்பது அனைத்தையும் ரசிகர்கள் கவனித்துக் கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டி உள்ளார்.
"எல்லா கலைஞர்களுக்குமே ரசிகர்கள் ஆதரவுதான் முக்கியம். அவர்கள் எவ்வளவு நாள் ஆதரிக்கிறார்களோ அதுவரை சினிமாவில் நிலைத்து இருக்கலாம். எனது படங்களுக்கு ரசிகர்கள் இப்போதும் ஆதரவு தருவதால் திருப்தியாக இருக்கிறேன். ரசிகர்கள் ஆதரவை விட பெரிய விருது எதுவும் கிடையாது," என்கிறார் தமன்னா.
சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகு எந்தவொரு கட்டத்திலும் தம்மை பெரிய நட்சத்திரமாக தாம் கருதியதில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், திரையுலகப் பணி என்பது தமது வாழ்க்கையில் ஒரு பகுதி என்பதை நன்கு உணர்ந்திருக்கிறாராம்.
"மிகவும் அன்பான ஒரு குடும்பம் எனக்கு வாய்த்திருக்கிறது. குடும்பத்துடன் அதிக நேரத்தைச் செலவிடுவது உற்சாகம் அளித்துள்ளது. மேலும், எனது அறையில் தனிமையில் இருப்பதையும் நேசிப்பேன். ஊரடங்கு நேரத்தில் எல்லோருக்குமே ஒருவகையில் மன அழுத்தம் ஏற்படும். அவ்வாறு உணரும்போது உடனடியாக அதிலிருந்து விடுபடுவதற்கு யாரிடமேனும் ஆலோசனைகளைப் பெறுவது நல்லது," என்கிறார் தமன்னா.

