நீலாம்பரியாக நடிக்க விரும்பும் பிரியாமணி

நீலாம்பரியாக நடிக்க விரும்பும் பிரியாமணி

2 mins read
313a7cc3-a5ed-41a3-b558-05a054d4c0a3
பிரியாமணி -

திருமணத்துக்குப் பிறகு பிரியாமணி நடிக்கும் படங்களுக்கான கால்ஷீட் மற்றும் சம்பளம் போன்ற அனைத்தையும் அவரது கணவர்தான் பார்த்துக் கொள்கிறார்.

அதனால் தம்மால் நிம்மதியாக நடிப்பில் கவனம் செலுத்த முடிவதாகச் சொல்கிறார் பிரியாமணி.

இந்நிலையில் அண்மைய பேட்டி ஒன்றில், 'படையப்பா' படத்தில் இடம்பெற்ற நீலாம்பரியைப் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

"நீண்ட இடைவெளிக்குப் பிறகு சவாலான வேடங்கள் அமைகின்றன. அந்த வகையில் எனது சினிமா பயணம் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது.

"'விராட பருவம்' படத்தில் நக்சலைட் போராளியாக நடித்து வருவது ரசிகர்களுக்குத் தெரியும். அந்த கதாபாத்திரத்துக்காக மிகவும் மெனக்கெட்டிருக்கிறேன்.

"வெறுமனே வசனங்களை மட்டும் பேசினால் போதாது. ஒரு போராளியின் மனதுக்குள் இருக்கும் பல்வேறு எண்ண ஓட்டங்களை பார்வையால் வெளிப்படுத்த வேண்டும்.

"அது மட்டுமல்ல, உடல்மொழியும் வித்தியாசமாக இருப்பது அவசியம். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு முடிந்தவரை என் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளேன்," என்கிறார் பிரியாமணி.

ஊரடங்கை பயன்படுத்தி நிறைய கதைகள் கேட்டு வருவதாகச் சொல்பவர், தற்போது திரைத்துறையில் நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவது மகிழ்ச்சி தருவதாக குறிப்பிட்டுள்ளார்.

"ஒரு காலத்தில் கதாநாயகனுக்கும் நாயகிக்கும் மரியாதை மாறுபட்டு இருக்கும். நாயகர்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

"ஆனால் இப்போது நிலைமை மாறுகிறது. காஜல் அகர்வால், தமன்னா, நயன்தாரா, சமந்தா போன்றவர்கள் சந்தை மதிப்பைப் பொறுத்து சம்பளம் வாங்குகிறார்கள். இதைப் பார்த்து சக நடிகையாக மகிழ்கிறேன்," என்று பிரியாமணி தெரிவித்துள்ளார்.

"எனக்கு பணத்தின் மீது ஆர்வம் இல்லை. இப்போது எனக்கு கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு திருப்தியாக இருக்கிறேன். நல்ல கணவரும் குடும்பமும் அமைந்திருப்பதால் எனது பணியில் கூடுதலாக கவனம் செலுத்த முடிகிறது.

"உங்களுக்குத் தெரியுமா? திருமணமான மூன்றாவது நாளே படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அந்தளவு கணவர் வீட்டாரின் ஆதரவு உள்ளது. எனவே திரையுலகில் நீடிக்க விரும்புகிறேன். கணவர்தான் எனது கால்ஷீட் விஷயங்களை கவனித்து கொள்கிறார்.

"ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அதுபோன்ற ஒரு வில்லி வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அதேபோல் முழுநீள நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன்," என்கிறார் பிரியாமணி.