'பிக்பாஸ்' நிகழ்ச்சி குறித்து நடிகை ஓவியா அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தம்மை மனநிலை சரியில்லாத பெண் என்று சிலர் பிரபலப்படுத்தி வருவதாக அவர் தமது அடுத்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 26ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தார் ஓவியா. அதற்குப் பலரும் பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்திருந்தனர். அவர்களுள் ஒரு ரசிகர், அந்நிகழ்ச்சியை தடைசெய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
அவரது பதிவுக்கு மேலும் பலர் பின்னூட்டமிட்டு இருந்தனர். அவர்களில் சிலருக்கு ஓவியா பதில் அளித்துள்ளார்.
பணம், புகழ் கிடைக்கும் என்பதால் நீங்கள் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுவிட்டு இப்போது வந்து இப்படிச் சொல்வது நியாயமா? என்று ஒரு ரசிகர் கேட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்த ஓவியா, "மற்றவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உயிரை மாய்த்துக் கொள்ள தூண்டுவதற்கான அங்கீகாரமாக ஒப்பந்தப் பத்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு உயிரும் முக்கியம். அந்த நிகழ்ச்சியை ஒட்டுமொத்தமாகத் தடை செய்ய வேண்டும் என்று நான் சொல்லவில்லை. இருந்தாலும் கொஞ்சம் கருணை காட்டுங்கள். நாங்களும் மனிதர்கள்தான்," என்று தெரிவித்துள்ளார்.
பழைய சர்ச்சையை மீண்டும் கிளறுகிறீர்களா? என்ற மற்றொரு கேள்விக்கு, தமிழகத்திலும் நடிகர் சுஷாந்த் சிங் போல் ஒருவரைப் பார்க்க விரும்பவில்லை என ஓவியா கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், திடீரென இவ்வாறு சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிடுவது ஏன்? என்று மற்றொரு ரசிகர் கேட்ட கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார்.
"நான் எப்படி அந்த நிகழ்ச்சி குறித்து கருத்து சொல்ல முடியும். ஏற்கெனவே எனக்கு மனநிலை சரியில்லை என்று பிரபலப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இப்போது கூட எனது மன ஆறுதலுக்காகவே இதையெல்லாம் நான் சொல்கிறேன். இதனால் இந்த நஞ்சு தோய்ந்த உலகில் எதுவும் மாறப்போவதில்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும்," என்று ஓவியா குறிப்பிட்டுள்ளார்.
ஓவியாவை சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பின்தொடர்கின்றனர். அவரைப் பற்றி யாரேனும் விமர்சித்தால் ஓவியா ஆர்மி என்ற பெயரில் இயங்கும் ரசிகர்கள் உடனுக்குடன் பதிலடி கொடுக்கத் தவறுவதில்லை. தற்போது ஓவியா தெரிவித்துள்ள கருத்துகளையும் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிர்கின்றனர். இந்த சர்ச்சை தொடர்பாக பிக்பாஸ்் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதுவரை ஏதும் கூறவில்லை.

