கொரோனா தொற்று காரணமாக கடந்த நான்கு மாதங்களாக தமிழ்த் திரையுலகம் முழுமையாக முடங்கிக் கிடக்கிறது. அரசாங்கம் சில தளர்வுகளை மட்டுமே அறிவித்து இருப்பதால் சில படங்களுக்கான 'போஸ்ட் புரோடக்ஷன்' பணிகள் மட்டும் நடந்து வருகின்றன.
அந்த வகையில், எஸ்.ஜி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஷ்ருதிஹாசன், கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள 'லாபம்' படத்திற்கான பின்னணி ஒலி சேர்ப்புப் பணிகள் தொடங்கியிருக்கின்றன. விஜய் சேதுபதியும் கலையரசனும் 'டப்பிங்' பேசும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி, அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
விஜய் சேதுபதியுடன் ஷ்ருதிஹாசன் இணைந்து நடித்திருப்பது இதுவே முதன்முறை. இந்தப் படத்தின் வில்லனாக தெலுங்கு நாயகன் ஜெகபதி பாபு நடித்துள்ளார். 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' பட இயக்குநர் ஆறுமுக குமாரும் விஜய் சேதுபதியும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
முழுவதும் கிராமத்துப் பின்னணியில் படம் உருவாகி இருக்கிறது. எஸ்.பி.ஜனநாதன் படங்களில் நாயகன் ஒரு போராளியாக இருப்பார். அதற்கேற்ப, இந்தப் படத்தில் மக்கள் பிரச்சினைக்குக் குரல் கொடுக்கும் மனிதராக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். வழக்கம்போல இந்தப் படத்தின் மூலமும் ஒரு முக்கியமான கருத்தைச் சொல்லி இருக்கிறாராம் இயக்குநர்.
நாயகி ஷ்ருதிக்கும் துணிச்சலான கதாபாத்திரம் வழங்கப்பட்டு இருக்கிறது என்றும் அது ரசிகர்களுக்குப் பெரும் வியப்பளிப்பதாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
தன்ஷிகா, பிரித்வி பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.படம் எப்போது வெளியாகும் என்ற தகவல் இல்லை.

