கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்கிறாராம் நயன்தாரா

கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்கிறாராம் நயன்தாரா

3 mins read
a1ec1ffd-6d22-43aa-84f9-ee01960cb2b5
நயன்தாரா. படம்: ஊடகம் -

வயதானாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்ற அளவிற்கு உயர்ந்து நிற்பவர் நயன்தாரா.

சில தயாரிப்பாளர்கள் தங்களுடைய படங்களில் நயன்தாராதான் நடிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கும் அளவிற்கு இருக்கிறார் 'லேடி சூப்பர் ஸ்டார்'.

உச்சத்தில் இருக்கும் மார்க்கெட்டை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் நயன்தாரா, மறுபதிப்பு படத்தில் நடிக்க ரூ.4 கோடி கேட்டிருக்கிறார். தயாரிப்பாளர் அதிர்ச்சியில் இருக்கிறார்; 'டோலிவுட்', 'கோலிவுட்' நடிகைகள் வாயடைத்துப் போய் இருக்கின்றனர்.

முன்னணி நடிகர்களின் படம் என்றாலே நயன்தாராவின் 'கால்ஷீட்' முக்கியம் என்பதுபோல் ஆகிவிட்டது.

கடந்த ஆண்டு வெளியான 'பிகில்', 'தர்பார்' இரண்டு திரைப்படங்களிலும் நயன்தாராவிற்கு முக்கியத்துவமே இல்லை என்றாலும் முன்னணி நடிகர்களுக்காக கோடிகளில் சம்பளம் கொடுத்து நடிக்க வைத்திருந்தார்கள். நயன்தாராவும் நானும் படத்தில் நடிக்கிறேன் என்று ஒரு பாட்டுக்கு ஆட்டத்தைப் போட்டுவிட்டு போய் இருப்பார்.

இவர் நடித்தால் கட்டாயம் போட்ட காசை எடுக்கலாம் என்ற நம்பிக்கை தற்பொழுது தயாரிப்பாளர்களுக்கு வந்துவிட்டது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்துள்ள 'மூக்குத்தி அம்மன்' படத்தில் முதன் முறையாக நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்திருக்கிறார். கொரோனா காரணமாக திரை அரங்குகள் திறக்கப்படாததால் படம் வெளியாகாமல் உள்ளது.

அதுமட்டுமின்றி காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் 'காத்து வாக்குல இரண்டு காதல்', விக்னேஷ் சிவனின் தயாரிப்பில், 'அவள்' படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கும்

'நெற்றிக்கண்' என்ற திரில்லர் படம், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'சூப்பர் ஸ்டார்'

ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' படத்தில் முக்கிய கதாபாத்திரம் என அம்மணியின் கைவசம் பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன.

இந்நிலையில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உட்பட பலர் நடித்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற இந்திப் படம் 'அந்தாதுன்'. நகைச்சுவை கலந்த திரில்லர் படமான இந்தப் படத்தை தெலுங்கில் மறுபதிப்பு செய்ய இருக்கிறார்கள். தெலுங்குப் பதிப்பில் நிதின் நாயகனாகவும் தமிழில் பிரசாந்த் நாயகனாகவும் நடிக்க இருக்கின்றனர்.

இந்த தெலுங்கு பதிப்பில்தான் நயன்தாராவை நடிக்க வைக்க தயாரிப்பாளர் அவரை அணுகியபோது "இப்பொழுது நான் ஒரு படத்தில் நடிக்க ரூ.4 கோடி வாங்குகிறேன். அது இருந்தால் பேசலாம்," என்று கூறியிருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இயக்குநர் படக்குழுவுடன் ஆலோசித்து விட்டு வருவதாகக் கூறிச் சென்றிருக்கிறார்.

இது திரைத்துறையில் தற்பொழுது தலைப்புச் செய்தியாக வலம் வருகிறது.

இதற்கிடையில் நயன்தாரா நடிக்கும் 'அண்ணாத்த' படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு தாயாக நடிக்கிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் கசிந்ததை அடுத்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

'அண்ணாத்த' படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என 4 நாயகிகள் நடிக்கின்றனர். அவர்களின் கதாபாத்திரம் என்னஎன்று கணிக்க முடியாமல் ரசிகர்கள் தவித்து வந்த நிலையில், தற்பொழுது நயன்தாரா கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்கிறார் என்ற தகவல் ஒன்று கசிந்துள்ளது.

ஆனால் படக்குழுவினர் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ போல வேகமாக பரவி வருகிறது.

இந்த திரைப்படத்தின் முதல் பாதி ஹைதராபாத்தில் உள்ள 'பிலிம் சிட்டி'யில் படமாக்கப்பட்ட நிலையில், ஊரடங்கு காரணமாக இரண்டாம் பாதியின் படப்பிடிப்பு இன்னும் தொடங்க முடியாமல் இருக்கின்றது.

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் மீண்டும் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்பதில் தயாரிப்பு நிறுவனம் உறுதியாக உள்ளதாம். ஆனால் ரஜினியோ "கொரோனா பிரச்சினை முழுவதுமாக தீர்ந்து, மருந்து கண்டுபிடித்தால்தான் மீண்டும் படப்பிடிப்புக்கு வருவேன்," என்று சொல்லிவிட்டாராம். அவரின் வயது மற்றும் ஏற்கெனவே சில அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டுள்ளார் என்பதே அதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

அதனால் ரஜினி வரும்வரை காத்திருக்காமல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் அவர் இல்லாத மற்ற காட்சிகளைப் படமாக்கிவிடலாம் என்று படக்குழு திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் மீண்டும் படப்பிடிப்பை தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் ஆரம்பமாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பிரச்சினை முழுவதுமாக முடிவுக்கு வந்த பின்னர் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கிக் கொள்ளலாம் என இயக்குநர் சிவா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.