மீண்டும் கேமரா முன்னால் நிற்பதும் நடிப்பதும் விவரிக்க இயலாத மகிழ்ச்சியை அளிப்பதாகச் சொல்கிறார் நடிகை மியா ஜார்ஜ்.
திரைப்படப் படப்பிடிப்புகள் இன்னும் தொடங்காத நிலையில் விளம்பரங்களில் மட்டும் நடிக்கத் தொடங்கியுள்ளாராம்.
இந்த ஊரடங்கின்போது பணிகள் முடங்கியதாக எல்லோரும் புலம்பிக் கொண்டிருக்க, இந்த ஓய்வு நேரம் தமக்கு பல விஷயங்களைப் புரிந்து கொள்ள உதவி செய்தது என்கிறார் மியா.
வேறொன்றுமில்லை, இவரது வருங்காலக் கணவருடன் தினமும் பலமணி நேரம் பேசமுடிந்ததாம். அதனால் மனதளவில் இருவரும் நெருக்கமாகி விட்டனராம். அதனால்தான் இவ்வளவு உற்சாகம்.
கேரளாவைச் சேர்ந்த மியாவுக்கும் அங்குள்ள பிரபல தொழிலதிபர் அஸ்வினுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. திருமண நிச்சயதார்த்தம் பெரிய ஆர்ப்பாட்டங்கள் இன்றி, இரு குடும்பத்தார் மட்டும் பங்கேற்க எளிமையாக நடந்துள்ளது.
திருமண நிகழ்வையேனும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் அழைத்து பிரம்மாண்டமாக நடத்தவேண்டும் என்பது மியாவின் விருப்பமாக உள்ளது. ஆனால், கொரோனா கிருமியின் ஆட்டத்தால் அது சாத்தியமாகுமா எனத் தெரியவில்லை எனப் புலம்புகிறார்.
"என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் இணைவதற்கு முன் நட்பாகப் பேசிப் பழகுவது நல்லது என்பேன்.
"பெற்றோர், குழந்தைகள், சகோதரர், சகோதரி என அனைத்து உறவுகளுக்குமே நட்புதான் அடித்தளம். அந்த வகையில் என் வருங்காலக் கணவருடன் இந்த ஊரடங்கின்போது நிறைய பேசி நட்பை வளர்த்துள்ளேன்," என்று உற்சாகமாகச் சொல்கிறார் மியா ஜார்ஜ்.
விளம்பரப் படங்களுக்கான படப்பிடிப்பு தொடங்கியது ஒருவகையில் நிம்மதி அளித்திருப்பதாகச் சொல்பவர், இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் எந்த வேலையும் செய்யாமல் வீட்டிலேயே முடங்கி இருக்க முடியும்? எனக் கேள்வி எழுப்புகிறார்.
"விளம்பரப் படப்பிடிப்பு குறைவான ஆட்களுடன்தான் நடைபெறும். மேலும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதால் சிக்கலின்றி வேலைகள் நடக்கின்றன.
"முன்னெச்சரிக்கையுடனும் கவனமாகவும் செயல்பட்டால் கொரோனா கிருமி பாதிப்பில் இருந்து நாம் தப்பிவிடலாம். அரசாங்கம் கூறும் அறிவுரைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். இதுவே எனது ரசிகர்களிடம் நான் முன்வைக்கும் ஒரே வேண்டுகோள்," என்கிறார் மியா.
இவரது சகோதரி தன் குழந்தைகளுடன் பெங்களூருவில் இருந்து கேரளா வந்துவிட்டாராம். அவர்களுடன் தினமும் லூட்டி அடித்ததால் பொழுது போவதே தெரியவில்லை என்கிறார். கூடவே திருமண ஏற்பாடுகள் குறித்தும் வீட்டில் கலந்து பேசித் திட்டங்களை வகுத்தாராம்.
"ஊரடங்கின்போது ரசிகர்களுடனும் சமூக வலைத்தளங்கள் வழி நிறைய உரையாடினேன். ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப அவ்வப்போது காணொளிகள், புகைப்படங்களைப் பதிவிட முடிந்தது. ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்குவது அவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் இனம்புரியாததோர் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
"என் வருங்கால வாழ்க்கைத் துணை குறித்து சில விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். அஸ்வினைப் பொறுத்தவரை எதையும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். தனக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அதை நேரடியாக நம்மிடமே சொல்லி விடுவார்.
"மேலும் அவர் எப்போதுமே ஆக்கப்பூர்வமாகவும் வளர்ச்சி குறித்தும் சிந்திக்கக் கூடியவர். இவை அனைத்தையும் மீறி தனது சுற்றத்தாரின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்," என்கிறார் மியா ஜார்ஜ்.
தற்போது தமிழில் இவர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பாதிப் படம் முடிந்துவிட்டதாம். திருமணமும் நெருங்குவதால் எப்படியேனும் இந்தப் படத்துக்கான தனது பங்களிப்பை நிறைவு செய்துவிட வேண்டும் என விரும்புகிறார். திருமணத்துக்குப் பிறகு தாம் தொடர்ந்து நடிப்பது கணவரின் விருப்பத்தைப் பொறுத்தது என்கிறார் மியா ஜார்ஜ்.

