நன்றி தெரிவிக்கும் உள்ளங்கள்

நன்றி தெரிவிக்கும் உள்ளங்கள்

3 mins read
2516ce81-b5d3-49f7-bfed-dd6624950a0b
ஷ்ரத்தா ஸ்ரீநாத். -

ஒரு திரைப்­ப­டம் வெற்றி பெறும்­போது அதற்கு உரிமை கொண்­டா­டு­வ­தும் தோல்வி அடைந்­தால் பிறர் மீது பழி போடு­வ­தும் திரை­யு­ல­கில் ஆண்­டாண்டு கால­மாக நடந்து வரும் சங்­க­தி­தான்.

எனவே சினிமா உல­கில் நன்றி தெரி­விப்­பது என்­பது எப்­போ­தா­வது நடக்­கும் நிகழ்வு என்­றாகி­விட்­டது. அத­னால் ஒரு­வர் நன்றி தெரி­வித்­தால் அது நிச்­ச­யம் பெரிய செய்­தி­தான்.

அந்த வகை­யில் திரை­யு­ல­கப் பிர­ப­லங்­கள் சிலர் அண்­மை­யில் சில­ருக்கு நன்றி தெரி­வித்­தது குறித்து அறிந்து கொள்­வோம்.

அஜித் நடிப்­பில் உரு­வான 'நேர்­கொண்ட பார்வை' வெளி­யாகி ஓர் ஆண்டு நிறை­வடைந்­துள்­ளது. இந்­நி­லை­யில், தமக்கு இப்­ப­டத்­தில் நடிக்க வாய்ப்பு அளித்­த­மைக்­காக இயக்­கு­நர் வினோத், கதை நாய­கன் அஜித் இரு­வ­ருக்­கும் நன்றி தெரி­வித்­துள்­ளார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

மேலும் இப்­ப­டத்­தின் முதல் நாள், முதல் காட்­சியை ரசி­கர்­க­ளு­டன் அமர்ந்து பார்த்­த­போது எழுந்த கை­தட்­டல்­க­ளு­டன் கூடிய காணொ­ளி­யை­யும் அஜித்­து­டன் தாம் இருக்­கும் புகைப்­ப­டத்­தை­யும் ஷ்ரத்தா டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார்.

அமி­தாப் நடிப்­பில் இந்­தி­யில் வெளி­யான 'பிங்க்' படத்­தின் மறு­ப­திப்­பாக தமி­ழில் உரு­வா­னது 'நேர்­கொண்ட பார்வை'.

இதில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், இயக்­கு­நர் ஆதிக் ரவிச்­சந்­தி­ரன், ரங்­க­ராஜ் பாண்டே ஆகி­யோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­தி­ருந்­த­னர்.

இதில் மீரா என்ற முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் அனை­வ­ரை­யும் கவ­ரும் வகை­யில் நடித்­தி­ருந்­தார் ஷ்ரத்தா. படத்­தில் நடித்த அனு­ப­வம் குறித்து அவர் டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார்.

"மீரா வலி­மை­யான, எளி­தில் உணர்ச்­சி­வ­சப்­ப­டக்­கூ­டிய பெண். எப்­போ­தும் தன் கையில் ஒரு ரப்­பர் பேண்­டை­யும் அணிந்­தி­ருப்­பார். வெப்­பம் அதி­க­மா­கும் சம­யத்­தில் அதைக் கொண்டு தன் தலை­மு­டி­யைக் கட்டிக் கொள்­வார்.

"மீரா தற்­சார்­பு­டை­ய­வர். பெண்­கள் அனை­வ­ரும் மீரா­வைப் போல இருக்கவேண்­டும். தோல்­வி­களை வெற்­றி­க­ளாக மாற்­றும் ஓர் உச்ச நட்­சத்­தி­ரம் இப்­படத்­தின் ஓர் அங்­க­மாக இருக்க முன்­வந்­த­தில் இருந்தே இப்­ப­டத்­தின் கதை எப்­ப­டிப்­பட்­டது என்­பது புரி­யும்.

"நாம் பேசத் தயங்­கும் விஷ­யங்­க­ளைப் பேசும் ஒரு படத்­தின் அங்­க­மாக இருந்­த­தும் 'தல'யுடன் சேர்ந்து நடித்­த­தும் பெரும் கௌர­வம்," என ஷ்ரத்தா தமது பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதே­போல் நடி­கர் சிம்­பு­வும் ஒரு­வ­ருக்கு நன்றி தெரி­வித்­துள்­ளார். அந்த 'ஒரு­வர்' இயக்­கு­ந­ரும் நடி­க­ரு­மான பார்த்­தி­பன்.

அண்­மைய பேட்டி ஒன்­றில் சிம்பு தொடர்­பாக எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு, "சிம்பு ஒரு சுயம்பு" என்று குறிப்­பிட்­டி­ருந்­தார் பார்த்­தி­பன்.

இதை­ய­டுத்து அவ­ருக்கு நன்றி தெரி­விக்­கும் வித­மாக, அவ­ரது வீட்­டுக்கு பூங்­கொத்­தும் இனிப்­பும் அனுப்பி வைத்­துள்­ளார் சிம்பு.

இவர்­கள் இரு­வ­ரும் ஒரு படத்­தில் கூட இணைந்து பணி­யாற்­றி­ய­தில்லை. இருப்­பி­னும் தனது திற­மை­யைப் பாராட்­டி­ய­தற்­காக சிம்பு நன்றி தெரி­வித்­துள்­ளார். இதை­ய­டுத்து பார்த்­தி­ப­னும் தன் பங்­கிற்கு டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார்.

"'சுயம்பு' சிம்பு பற்­றிய பாராட்டு அவ­ருக்கு எட்ட, அவ­ரது உத­வி­யா­ளர் பூங்­கொத்­தும் சாக்­லெட்­டு­மாக வந்­தார். மிஸ்­டர் சிம்பு நன்­றி­ தெரிவித்ததில் மிஸ்­டர் பண்பு ஆனார் எண்­ணப் புத்­த­கத்­தில்!

"நாம் இரு­வ­ரும் ஏன் இணைந்து பணி­யாற்­ற­வில்லை என எனக்கே ஆச்­ச­ரி­ய­மாக இருக்­கிறது. அதா­கப்­பட்­டது, விரை­வில் இடி­யு­டன் கூடிய மழை பெய்­ய­லாம்," என்று பார்த்­தி­பன் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதைக் கண்ட சிம்பு ரசி­கர்­கள் உற்­சாகம் அடைந்­துள்­ள­னர். பார்த்­தி­பன், சிம்பு கூட்­டணி ஒரு படத்­தில் இணை­வது குறித்த அறி­விப்பு வெளி­யா­னால் ஆச்­ச­ரி­யப்­பட ஒன்­று­மில்லை.

நடி­கர் சந்­தா­னம் சிம்­பு­வுக்கு நன்றி தெரி­வித்­துள்­ளார். தனது வளர்ச்­சி­யில் சிம்பு மிகுந்த அக்கறை கொண்­டி­ருப்­ப­தா­க­வும் சந்­தா­னம் கூறு­கி­றார்.

நாய­க­னாக நடிக்­கத் தொடங்­கிய பிறகு முன்னணி நடி­கர்­கள் யாரும் இவ­ரைக் கண்­டு­கொள்­வ­தில்­லை­யாம். ஆனால் சிம்பு மட்­டும் தொடர்­பில் உள்­ளா­ராம்.

"நகைச்­சுவை நடி­க­னாக எனக்­குப் பல வாய்ப்பு­களைக் கொடுத்­த­தும் பெற்­றுத் தந்­த­தும் சிம்­பு­தான். இப்­போது எனது படங்­கள் குறித்து அக்­க­றை­யு­டன் விசா­ரிக்­கி­றார். சாதிக்கவேண்­டும் என்­ப­தற்கு தூண்­டு­கோ­லாக இருக்­கும் அவ­ருக்கு என்ற நன்றி," என்­கி­றார் சந்­தா­னம்.