ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'சினம்' படத்தின் சுவரொட்டி நேற்று வெளியானது.
இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதாம்.
இந்தப் படத்திலும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் அருண் விஜய். அண்மையில்தான் பின்னணிக் குரல் பதிவுப் பணிகள் முடிவடைந்தன. இதையடுத்து இரண்டாவது சுவரொட்டி வெளியிடப்படுகிறது.
முதல் தோற்ற சுவரொட்டியை அருண் விஜய்யின் பிறந்தநாளன்று இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார்.
"இது வழக்கமான போலிஸ் கதையாக இருக்காது. அதேசமயம் காவல்துறை சம்பந்தப்பட்ட வேகமும் விறுவிறுப்பும் கொஞ்சம் கூட குறையாது," என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இது அருண் விஜய்யின் முப்பதாவது படம். அவரது தந்தை விஜயகுமார்தான் தயாரிப்பாளர்.
இதற்கு முன்பு காவல்துறை உதவி ஆணையராக நடித்துள்ள விஜய் இம்முறை காவல் உதவி ஆய்வாளராக நடிக்கிறார். சகா இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவுக்குப் பொறுப்பேற்றுள்ளார்.
"அருண் விஜய் படம் என்றால் அதிரடிக்கும் அடிதடிக்கும் பஞ்சமே இருக்காது. இதிலும் அவர் அசத்தியுள்ளார்.
அதேசமயம் திரைக்கதையும் காட்சி அமைப்பும் நிச்சயம் ரசிகர்களை வியந்து ரசிக்க வைக்கும். மொத்தத்தில் அனைத்து தரப்பினருக்குமான படம் இது," என்று படக்குழு இப்போதே உத்தரவாதம் அளிக்கிறது.

