எஸ்பிபிக்கு கொவிட்-19; நண்பருக்காக வருந்தும் இளையராஜா

1 mins read
aa207f90-34f1-41b0-b68c-1f4fcbe418e5
-

"சண்டை போட்டாலும் சரி.. நம் இருவருக்குள் சண்டை இருந்தாலும் அது நட்பே. சண்டை இல்லாமல் போனபோதும் அது நட்பே."

இவ்வாறு தமது காணொளிப் பதிவு ஒன்றில் தமிழ் திரை இசையமைப்பாளர் இளையராஜா, கொவிட்-19 நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் குறித்து பேசியுள்ளார்.

பாடல்களின் பதிப்புரிமை குறித்து இளையராஜாவுக்கும் எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு முன்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரகுமான், யுவன் சங்கர்ராஜா பாடகி சித்ரா உள்ளிட்ட திரைத்துறையினர் பலரும் பாலசுப்ரமணியத்தின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்து வருவதாகத் தத்தம் சமூக ஊடகப் பக்கங்களில் தெரிவித்தனர்.

கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர் 'எஸ்பிபி' எனப் பிரபலமாக அழைக்கப்படும் பாலசுப்ரமணியம், ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒரு சில நாட்களுக்குப் பிறகு அவரது காய்ச்சல் தணிந்தபோதும் ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று அவரது நிலைமை மோசமடைந்து அவருக்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டது. பாலசுப்ரமணியத்தின் நிலை கவலைக்கிடமாக இருந்ததாக மருத்துவமனை நேற்று அறிவித்த பின்னர் அவரது உடல்நிலை சற்று முன்னேறியிருப்பதாக மகன் எஸ்.பி பி சரண் பிறகு கூறினார்.

கொவிட்-19 பற்றிய பாடல் ஒன்றுக்காக பாலசுப்ரமணியம் பாடலாசிரியர் வைரமுத்துடன் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.