திரையுலகில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார் வெங்கட் பிரபு.
முன்னணி இயக்குநராக இருந்தாலும் நடிப்பு மீதான ஆர்வத்தையும் அவ்வப்போது வெளிப்படுத்துபவர், இப்போது 'லாக்கப்' படத்தி்ல் நடித்துள்ளார்.
இப்படம் இணையம் வழி வெளியீடு காண்பது வருத்தமாக உள்ளதா என வெங்கட் பிரபுவிடம் சிலர் கேட்டனராம். திரையரங்கில் ரசிகர்களின் விசில் சத்தத்தையும் கைத்தட்டல்களையும் பார்க்க முடியாதது வருத்தம் அளித்தாலும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களை இப்படம் விரைவாகவும் பரவலாகவும் சென்றடைவது மகிழ்ச்சி தருவதாகச் சொல்கிறார் வெங்கட்.
"இன்னும் நிறைய மாற்றங்களைப் பார்க்கப் போகிறோம். மாற்றம் ஒன்றே மாறாதது.
முன்பு, இயக்குநர் எஸ்பி.முத்துராமன் சார் ஒரே நாளில் இரண்டு படங்களின் படப்பிடிப்புகளை நடத்திச் செல்வார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
"அப்போது அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில், அந்தக் காலத்தில் அற்புதமான எழுத்தாளர்கள் இருந்தனர். இயக்குநருக்கு உள்ள சுமையை பெருமளவு குறைத்தனர்.
"ஆனால் இன்றைய இளையர்களோ ஒரு கதையை எழுதிய கையோடு அதை வைத்து படம் இயக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். எனவே வருங்காலத்தில் எழுத்தாளர்களுக்குத்தான் நல்ல வரவேற்பு கிடைக்கும்," என்கிறார் வெங்கட் பிரபு.
ஊரடங்கு காரணமாக முன்பு போல் விருந்து நிகழ்வுகளை நடத்த முடியவில்லை என்ற வருத்தம் உள்ளதா?
"யார் சொன்னது? நேரில் சந்திக்க முடியாவிட்டாலும் எங்களுடைய நட்புக்குழுவின் விருந்து நிகழ்வுகள் இணையம் வழி தொடர்ந்து நடந்து வருகிறது.
"என் வீட்டில் இருந்தபடியே நண்பர்களுடன் காணொளி வசதி மூலம் பேசிக் கொண்டிருக்கிறேன். எல்லோரும் பேசி முடிக்க பல மணி நேரம் ஆகும். பல கதைகளைப் பேசி மகிழ்கிறோம். முந்தைய விருந்து நிகழ்வுகளைவிட இந்த இணைய விருந்து ஒருவகையில் சுவாரசியமாகத்தான் உள்ளது," என்று சொல்லும் வெங்கட் பிரபு தற்போது 'பார்ட்டி' படத்தை இயக்கி உள்ளார். அடுத்து சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை இயக்குகிறார்.
அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. ஊரடங்கு முடிந்த பின்னர் படப்பிடிப்பு தொடங்குவது உறுதியாகியுள்ளது.
'பார்ட்டி' எப்போது வெளியாகும்?
"இந்தக் கேள்விக்கான பதில் உண்மையாகவே எனக்குத் தெரியவில்லை. டி.சிவா சார்தான் இந்தப் படத்தை தயாரித்தார். பணப் பிரச்சினைகள் உள்ளன.
"பெரும்பாலான காட்சிகளை ஃபிஜி தீவில்தான் படமாக்கினோம். அந்நாட்டு அரசாங்கத்துடன் சிவா சார் இணைந்து செயல்பட்டார்.
"ஒருசில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அவை சாதகமாக அமைந்தால் 'பார்ட்டி' திரையரங்குகளில் வெளியாகும். நிச்சயமாக நண்பர்களுடன் அமர்ந்து ரசித்து, சிரித்து பார்க்கும் படமாக இருக்கும். பொதுவாக எனது படங்களில் நகைச்சுவை தூக்கலாக இருக்கும். அந்த வகையில் பார்ட்டியும் ரசிகர்களை திருப்தி படுத்தும்," என்கிறார் வெங்கட்.

