மிக விரைவில் ஊரடங்கு முடிவுக்கு வந்துவிடும் எனும் நம்பிக்கையில் திரையுலகத்தினர் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருகின்றனர்.
உச்ச நடிகர்கள் தொடங்கி துணை நடிகர்கள் வரை யார் யார் எந்தெந்த படங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர், அவர்கள் அடுத்து நடிக்கும் படங்கள் என்னென்ன என்பது குறித்து தினமும் பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அவற்றுள் உறுதி செய்யப்பட்ட சில தகவல்களைப் பார்ப்போம்.
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ஒரு பக்கம் நடித்துக்கொண்டே மறுபக்கம் படங்களும் தயாரிக்கிறார். இவரது தயாரிப்பில் உருவான 'மீக்கு மாத்திரமே செப்தா' தெலுங்கு படத்தின் மூலம்தான் சினிமாவில் அறிமுகமானார் வாணி போஜன்.
இதையடுத்து தமிழில் நடித்த 'ஓ மை கடவுளே' படமும் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. வைபவ்வுடன் இவர் நடித்த 'லாக்கப்' நேரடியாக இணையத்தில் வெளியான நிலையில் அடுத்து அதர்வாவுடன் ஒரு படம், விக்ரம் பிரபுவுடன் ஒரு படம் என இரண்டு புதுப்படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.
இவை இரண்டுமே தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகின்றன. மேலும் மற்றொரு முன்னணி நடிகர் படத்தில் நடிப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
'கபாலி'யில் நடித்தபிறகு தமிழில் ஒரு சுற்று சாதிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் இந்திப் பக்கம் ஒதுங்கிவிட்டார் ராதிகா ஆப்தே.
'ஆல் இன் ஆல் அழகு ராஜா' உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்ததை அவரே மறந்துவிட்டாரோ என்று நினைக்கத் தோன்றியது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் உருவாகும் இணையத் தொடரில் ஒப்பந்தமாகி இருக்கிறார் ராதிகா. அவர் இந்தியில் நடித்த இணையத் தொடரை தமிழில் மொழிமாற்றம் செய்யும் முயற்சியும் நடந்து வருகிறது.
கீர்த்தி சுரேஷ் மீண்டும் தமிழ்ப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கும் புதுப்படத்தில் இவர் ஒப்பந்தமாகி உள்ளார்.
இது நாயகியை முன்னிலைப்படுத்தும் கதையாம். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் இயக்குநர் செல்வராகவன். இந்தத் தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. செல்வராகவனைத் தொடர்பு கொண்டு இது உண்மையா என்று கேட்கிறார்களாம்.
இப்படத்துக்கு 'சாணிக் காகிதம்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இதன் முதல் தோற்ற சுவரொட்டியும் வெளியாகி உள்ளது. அதை தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் செல்வா.
அவர் நடிகராக அறிமுகமாவதை வரவேற்பதாகக் குறிப்பிட்டு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். செல்வராகவன் போன்ற அனுபவ இயக்குநருடன் இணைந்து நடிப்பது உற்சாகமளிப்பதாக தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
'மாநாடு', 'மகா' உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் சிம்பு அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது பெரும் பொருட்செலவில் உருவாகும் படமாம். ஊரடங்கு முடிந்த பிறகு படப்பிடிப்பு துவங்க உள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக நடிக்க ஷ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல். மிஷ்கின் கூறிய கதை ஷ்ருதிக்கு மிகவும் பிடித்துப் போனதான்.
எனினும் தமிழில் அவர் தற்போது நடித்துவரும் 'லாபம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகே கால்ஷீட் ஒதுக்க முடியும் என மிஷ்கினிடம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
பிரியா பவானி சங்கருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது 'குருதியாட்டம்', 'களத்தில் சந்திப்போம்', 'பொம்மை', 'இந்தியன்-2' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
அடுத்தாண்டு ஜூன் இறுதி வரை கால்ஷீட் இல்லை என்று தெரிவித்த பிறகும் பல இயக்குநர்கள் தங்கள் படத்தில் நடிக்குமாறு கேட்டு வருகிறார்களாம்.
இந்நிலையில் 'ஒரு நாள் கூத்து', 'மான்ஸ்டர்' ஆகிய படங்களை இயக்கிய நெல்சனும் பிரியாவிடம் கால்ஷீட் கேட்டுள்ளார்.
நேரடியாக இணையத்தில் வெளியிடும் முடிவுடன் ஒரு படத்தை இவர் இயக்க உள்ளாராம். அவர் சொன்ன கதை பிடித்துப் போனதால் எப்படியேனும் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என பிரியா முயற்சி செய்து வருவதாகத் தகவல்.

