மின்ஸ்க்: பெலருஸ் அரசுக்கு ராணுவ ரீதியில் உதவ தயாராக உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
சோவியத் ஒன்றியத்திலிருந்து பெலாரஸ் பிரிந்தது முதல் அந்த நாட்டை 26 ஆண்டுகளாக ஆண்டு வரும் ஆட்சியாளர் அலெக்சாண்டர் லுகஷென்கோ, கடந்த வாரம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 80 விழுக்காடு வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தேர்தலுக்கு முந்திய கணிப்பு
களின் அடிப்படையில், இந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்வெட்லானா ஷிகானோஸ்கயாவுக்கு வெறும் 10 விழுக்காட்டு வாக்குகளே கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாகவும் அதனால் தேர்தல் முடிவுகளை நிராகரிப்பதாகவும் நடுநிலையாளர்களும் எதிர்க்கட்சியினரும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெலருஸில் கடந்த ஒரு வாரமாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆர்ப்பாட்டங்களால் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. போலிசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி எறிந்தும் தடியடி நடத்தியும் ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டி அடித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஆயிரக்கணக்கானோர் கைது
செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
பெலருஸில் அதிபர் அலெக்சாண்டர் லுகஷென்கோவுக்கு எதிராக ஒருபுறம் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு அவருக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை தலைநகர் மின்ஸ்கில் அவருக்கு ஆதரவாக நடைபெற்ற ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்த ஊர்வலத்தின் போது அதிபரை வாழ்த்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இதற்கிடையே, தேவைப்பட்டால் கூட்டு ராணுவ உடன்படிக்கைக்கு ஏற்ப பெலருஸுக்கு உதவ தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் லுகஷென்கோவிடம் சொன்னதாக ரஷ்ய ஊடகமான கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

