நடிகைகளிடம் கேள்வி கேட்கலாம் என்று அனுமதி அளித்தால், "நீங்கள் யாரையேனும் காதலிக்கிறீர்களா? உங்களுக்கு எப்போது திருமணம்?" என்பதுதான் பெரும்பாலான ரசிகர்கள் கேட்கும் கேள்விகளாக இருக்கக்கூடும்.
நடிகைகளின் திருமணம் குறித்த செய்திகளைத்தான் பல ரசிகர்கள் ஆர்வமாக படிக்கிறார்கள்.
இந்நிலையில் இரு பிரபல நடிகைகளின் திருமணம் குறித்து கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.
நடிகை நிவேதா தாமஸ் காதல் வயப்பட்டிருப்பதாகவும் விரைவில் அவர் திருமணம் செய்துகொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், அவர் தரப்பில் இது உண்மையல்ல என்கிறார்கள்.
தனது வருங்கால கணவர் குறித்து பல எதிர்பார்ப்புகள் இருப்பதாகச் சொல்கிறார் நிவேதா தாமஸ்.
எனினும் திருமணம் குறித்து தற்போது யோசிக்கவில்லையாம்.
"என்னைப் பொறுத்தவரை வருங்கால வாழ்க்கைத் துணையாக வரப்போகிறவர் எனக்கு உண்மையாக இருக்கவேண்டும்.
"எந்தப் பெண்ணுமே அப்படிப்பட்ட ஒருவரைத்தான் விரும்புவார்.
"நான் அருகில் இருக்கும்போது ஒரு மாதிரி பேசிவிட்டு நான் இல்லாதபோது வேறு மாதிரி பேசுபவர்களை நான் அறவே புறக்கணித்து விடுவேன்.
"நண்பர்கள், உறவினர்களுக்கே இதுதான் கதி. அப்படியானால், எனக்கு கணவராக வரப்போகிறவர் எப்படி இருக்கவேண்டும் என விரும்புவேன் என்பது உங்களுக்கு இந்நேரம் புரிந்திருக்கும்.
"என்னுடைய கணவர் தனக்குள்ள பொறுப்புகளுடன் என்னுடைய கடமைகளையும் சுமந்து செல்பவராக இருக்கவேண்டும் என விரும்புகிறேன். வாழ்க்கை என்பதே ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்வதுதான்," என்கிறார் நிவேதா தாமஸ்.
பயணம் மேற்கொள்வது என்றால் இவருக்கு கொள்ளை ஆசையாம். தமது கணவரும் பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வமாக இருக்கவேண்டும் என விரும்புகிறாராம்.
சமுத்திரகனி இயக்கிய 'போராளி' படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நிவேதா. பின்னர் 'ஜில்லா' படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தார்.
பின்னர் தெலுங்கு, மலையாளப் படங்களில் கவனம் செலுத்தி வந்தவர், 'பாபநாசம்' படம் வெளியாகி சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகே 'தர்பார்' மூலம் கோடம்பாக்கத்தில் மறுபிரவேசம் செய்தார்.
அதன்பிறகு மேலும் பல தமிழ்ப் படங்களில் நடிக்கவேண்டும் என்றுதான் விரும்பினாராம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கொரோனா கிருமி முட்டுக்கட்டை போட்டுவிட்டது.
இந்நிலையில் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் உரையாடியபோது பலரும் காதல் குறித்தும் திருமண வாழ்க்கை பற்றியும் அதிகமான கேள்விகள் எழுப்பி உள்ளனர். அவற்றுக்குத் தயங்காமல் பதில் அளித்துள்ளார் நிவேதா.
எல்லோருமே வாழ்க்கையில் காதலிக்க வேண்டும் எனும் அவசியமில்லை என்று குறிப்பிட்டுள்ளவர், திருமணத்துக்கும் இது பொருந்தும் என்கிறார்.
தற்போது காதலிக்கவோ திருமணம் செய்துகொள்ளவோ தமக்கு நேரமில்லை என்றும் அவை குறித்துப் பேசுவதற்கு தாம் தயங்கியதில்லை என்றும் கூறுகிறார் நிவேதா.
"வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டும் என்பதே எனது விருப்பம். அதுகுறித்துதான் அதிகம் யோசிக்கிறேன். அந்த விருப்பம் நிறைவேறுவதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதைச் செய்யத் தயாராக உள்ளேன்," என்று சொல்லும் நிவேதாவுக்கு எதிர்காலத்தில் இயக்குநராக வேண்டும் என்பதுதான் கனவு.
அப்படியொரு வாய்ப்பு அமையும்போது அதைத் தவறவிடாமல் நிச்சயம் பயன்படுத்திக் கொள்வாராம்.
"படம் இயக்குவது சாதாரண விஷயமல்ல என்பதை உணர்ந்திருக்கிறேன். சில ஆண்டுகள் நடித்துவிட்டதால் அந்த அனுபவமே ஒரு திரைப்படத்தை இயக்கப் போதுமானது அல்ல என்பதும் தெரியும்.
"எனினும் எனது அந்த இலக்கை நோக்கி மெல்ல நடைபோடுகிறேன். என்னால் சாதிக்க முடியும் எனும் நம்பிக்கை ஏற்படும்போது இயக்குநராக வெளிப்படுவேன். அதுவரை காத்திருப்பேன்," என்று பக்குவமாகப் பேசுகிறார் நிவேதா தாமஸ்.

