கொரோனா ஊரடங்கால் கிடைத்துள்ள ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி சில உருப்படியான காரியங்களைச் செய்து வருகிறார் நடிகை மஞ்சிமா மோகன்.
அண்மைய சில வாரங்களாக கட்டட உள் அலங்காரம் தொடர்பான இணையம் வழி பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து வருகிறார்.
தினமும் சில மணி நேரம் நடைபெறும் பயிற்சி வகுப்பின் முடிவில் வீட்டுப் பாடங்கள் தரப்படுகின்றன. அவற்றையெல்லாம் சமர்த்துப் பெண்ணாக முடித்து நல்ல மாணவி என்று பெயரெடுத்துள்ளாராம்.
இந்தப் பயிற்சி வகுப்பு மீண்டும் பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் உணர்வையும் உற்சாகத்தையும் அளித்திருப்பதாகச் சொல்கிறார்.
தற்போது 'எஃப்.ஐ.ஆர்.' 'துக்ளக் தர்பார்', 'களத்தில் சந்திப்போம்' உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் மஞ்சிமா பல்வேறு துறைகளில் இளம் திறமைசாலிகளை ஊக்குவிக்கும் விதமாக தொடங்கியுள்ள 'ஒன் இன் எ மில்லியன்' அமைப்புக்கான பணிகளையும் ஒருசேர கவனித்து வருகிறார்.
"உள் அலங்காரப் பயிற்சி வகுப்பில் நிறைய திறமைசாலிகளைப் பார்க்க முடிகிறது.
"அவர்களுடைய திறமை பிரமிக்க வைக்கிறது. நாமும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் இந்தப் பயிற்சியில் இணைந்தேன்.
"இப்போது கிடைத்துள்ள வாய்ப்பும் ஓய்வும் இனி வரும் காலத்தில் கிடைக்குமா எனத் தெரியவில்லை. எனவே, கிடைத்த வாய்ப்பை நல்லவிதமாகப் பயன்படுத்துகிறேன்.
"இயல்பாகவே எனக்கு ஓவியம் தீட்டுவது பிடிக்கும். அதை முறைப்படி கற்றுக்கொண்டு செய்வது போல் இருக்கிறது இந்தப் பயிற்சி," என்று சொல்லும் மஞ்சிமா, விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தமது நீண்டநாள் விருப்பமாக இருந்தது என்கிறார்.
சேதுபதி போல் யதார்த்தமாக நடிக்கக் கூடியவர்களுடன் இணைந்து பணியாற்றும்போது நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்கிறார். 'துக்ளக் தர்பார்' படத்தில் இவருக்கு சேதுபதியின் தங்கை வேடமாம்.
"சேதுபதி சாருடன் இணைந்து நடிப்பது சவாலான விஷயம். இன்னும் 15 நாள் படப்பிடிப்பு நடக்க வேண்டி உள்ளது. முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட உள்ளன. அதிலும் சேதுபதி சாருடன் இணைந்து நடிக்கும் காட்சிகள்தான் அதிகம். அந்த சவாலான தருணங்களை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.
"இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளிலிருந்தே ஒருவித பதற்றம் மனதில் குடிகொண்டிருக்கிறது. காரணம், சேதுபதியுடன் இணைந்து நடிப்பதுதான். வேறு எந்தப் படத்தில் நடித்தபோதும் நான் இவ்வாறு பதற்றமடைந்ததில்லை," என்கிறார் மஞ்சிமா.
அண்மைய சில வாரங்களாக ஊரடங்கு வேளையில் நிறைய புத்தகங்கள் படித்தாராம். தவிர பலவிதமான ஓவியங்களையும் உள் அலங்கார வரைபடங்களையும் வரைந்து தீர்த்தாராம்.
மஞ்சிமாவுக்குப் பிடித்த நடிகை வித்யாபாலன். அவருடன் இணைந்து நடித்தபோது பல விஷயங்களைக் கற்றுக் கொண்டதாகச் சொல்கிறார்.
"வித்யா பாலனிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்டு அவரை ஒரு வழியாக்கி விட்டேன். எனினும் நான் எழுப்பிய அனைத்துக் கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொன்னார். அதேசமயம் என்னைப் பற்றியும் நிறைய கேட்டுத் தெரிந்துகொண்டார். அவரது நடிப்பை நேரில் கண்டு ரசிப்பது அற்புதமான அனுபவம்.
"அவரிடம் கேட்டதுபோல் மோகன்லால் சார், விஜய் சார் ஆகியோரிடமும் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய உள்ளன. அதற்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன்.
"வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் நடிக்க ஆர்வமா என்று பலரும் கேட்கிறார்கள். அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தால் தயக்கமின்றி நிச்சயம் ஏற்றுக்கொள்வேன்," என்கிறார் மஞ்சிமா மோகன்.