கொரோனா ஊரடங்கின்போது முன்னணி நடிகர், நடிகையர் மிகவும் விவரமானவர்களாக மாறிவிட்டனர்.
படங்களைத் தேர்வு செய்வது, கால்ஷீட் ஒதுக்குவது, அதற்கேற்ற சம்பளத்தைத் தீர்மானிப்பது என்று அனைத்து வகையிலும் முன்னணிக் கலைஞர்களின் அணுகுமுறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதாக கோடம்பாக்க விவரப்புள்ளிகள் கூறுகின்றனர்.
இவ்வாறு தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொண்டவர்களைப் பற்றி பார்ப்போம்.
நடிகை ராஷி கன்னா இப்போதெல்லாம் சம்பளம் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்வதில்லையாம். நல்ல கதாபாத்திரம் இருந்தால் சம்பளமும் கால்ஷீட்டும் ஒரு பொருட்டே அல்ல என்கிறார்.
"பத்து கோடி கொடுப்பதாக இருந்தாலும் கதை நன்றாக இல்லை என்றால் நிச்சயம் நடிக்கமாட்டேன். அதேசமயம் நல்ல கதை என்றால் குறைவான சம்பளம் என்றாலும் என்னை அந்தப் படத்தில் பார்க்க முடியும். கலைஞர்களுக்கு ஆத்மதிருப்திதான் முக்கியம்," என்கிறார் ராஷி கன்னா.
பிறகு ஏன் தோல்விப் படங்களிலும் நடித்திருக்கிறீர்கள் என்று சிலர் கேட்பதற்கு இவரிடம் பதில் உள்ளது. வெற்றி தோல்வி என்பது நம் கையில் இல்லை என்கிறார். கதை தேர்வு செய்வது மட்டுமே நம் கையில் இருக்கிறது என்று குறிப்பிடுபவர், ரசிகர்கள் என்ன முடிவெடுப்பார்கள்? என்பது நமக்கு முன்கூட்டியே தெரியாது என்று சுட்டிக் காட்டுகிறார்.
அண்மையில் நீச்சல் உடை படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கிறங்கடித்த மாளவிகா மோகனன் அடுத்து தனுசுடன் நடிக்க இருப்பதாகத் தகவல்.
கார்த்திக் நரேன் இயக்கும் இந்தப் படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம்.
எனினும் 'மாஸ்டர்' படத்தில் நடித்துவிட்டதால் மாளவிகா தரப்பில் அதிக சம்பளம் கேட்கப்படுவதாகத் தகவல். அதனால் தயாரிப்புத் தரப்பு தயங்குவதாகவும் ஒருவேளை ஏதேனும் ஒரு தரப்பு இறங்கி வந்தால் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.
அதிதிராவ் அதிகம் அலட்டிக்கொள்ளாத கதாநாயகி. கதை பிடித்துப் போனால் கால்ஷீட்டை அள்ளிக் கொடுப்பார்.
தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் 'துக்ளக் தர்பார்', துல்கர் சல்மானுடன் 'ஹே சினாமிகா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் அதிதி. அடுத்து ஜிவி. பிரகாசுடன் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரசாந்த் இயக்குகிறார்.
தமிழில் நடிக்க அதிக சம்பளம் கேட்பார் என்று கூறப்பட்ட நிலையில் கதை பிடித்துப் போனதால் புது இயக்குநர் என்றாலும் கணிசமாக குறைத்துக் கொண்டாராம் அதிதி. இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப, அதிதி தெரிவித்த பதில் பலரால் பாராட்டப்படுகிறது.
"சினிமா என்பது கூட்டு முயற்சி. கொரோனா விவகாரத்தால் அனைவரும் படாதபாடு படுகிறோம். அனைத்துத் தொழில் துறையும் முடங்கியுள்ள நிலையில் சினிமா தயாரிப்பாளர்களுக்கு மட்டும் எங்கிருந்து பணம் வரும்? தயாரிப்பாளர்கள் இல்லை என்றால் சினிமாவே இல்லை. இதைப் புரிந்து கொண்டால் எந்தச் சிக்கலும் இல்லை," என்கிறார் அதிதிராவ்.
'மாஸ்டர்' படம் வெளியாகாவிட்டாலும் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய்.
பொதுவாக இவரது படங்களுக்கான பட்ஜெட் அதிகரித்துக் கொண்டே போகும். அதற்கேற்பதான் கதைகளையும் தேர்வு செய்வார்.
'மாஸ்டர்' படத்தின் வியாபார அளவும் அதன் வெற்றி தோல்வி குறித்தும் யாராலும் இன்னும் தீர்மானிக்க முடியவில்லை. இந்நிலையில் அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும், 'தளபதி 65' என்று குறிப்பிடப்படும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவது உறுதியாகி உள்ளது. இப்படத்தின் பட்ஜெட் 130 கோடியாம்.
எனவே, விஜய்யின் சம்பளம் என்ன என்பதை ஓரளவு யூகிக்க முடியும். 'மாஸ்டர்' வெளியான பின் இருக்கும் நிலவரத்துக்கு ஏற்ப சிலவற்றை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்று தயாரிப்புத் தரப்பிடம் விஜய் உறுதி அளித்திருப்பதாகத் தகவல். இதனால் சன் பிக்சர்ஸ் தரப்பும் உற்சாகமடைந்துள்ளதாம்.
'ஜாம்பி' படத்துக்குப் பிறகு நடிகர் மகத்துடன் 'இவன்தான் உத்தமன்' படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் ஆரவ் நடித்துள்ள 'ராஜபீமா' படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார்.
இந்நிலையில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நடிக்கும் 'சிறுத்தை சிவா' படத்திலும் இவரை ஒப்பந்தம் செய்தனர். 'பிக்பாஸ்' தந்த புகழால் சகட்டுமேனிக்கு சம்பளம் கேட்ட யாஷிகாவுக்கு கொரோனா ஊரடங்கு வேளையில் புது வாய்ப்புகள் ஏதும் தேடிவரவில்லை. இதையடுத்து சுதாரித்துக்கொண்ட அவர், தனது சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதாக கூறியுள்ளாராம்.
இந்த அறிவிப்பால் கவரப்பட்ட சில தயாரிப்பாளர்கள் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடும்படி கேட்டு அணுகினார்களாம். ஆனால், யாஷிகா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
"இப்போது வாய்ப்புக் கிடைக்கிறது என சம்மதித்தால் பிறகு தன்னை கவர்ச்சி நடனக்கலைஞராகவே மாற்றி விடுவார்கள்," என்பதுதான் யாஷிகாவின் புறக்கணிப்புக்கு காரணமாம்.

