திரையுலகக் கலைஞர்கள் பலரும் ஊரடங்கின்போது உடற்பயிற்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
அதிலும் முன்னணி நடிகைகள் உடற்பயிற்சியின்போது யோகாசனம் செய்யும்போதும் எடுக்கப்பட்ட காணொளிப் பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வாடிக்கையாகி விட்டது.
அந்த வகையில் நடிகை ரகுல் பிரீத்சிங் பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார். தீவிர உடற்பயிற்சியும் யோகாவும்தான் தனது அழகான உடற்கட்டுக்குக் காரணம் என்கிறார் ரகுல்.
நடிகை லட்சுமி மஞ்சுவும் இவரும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இணைந்து உடற்பயிற்சி செய்கிறார்கள்.
வெவ்வேறு வகையான உடற்பயிற்சி நுணுக்கங்களை லட்சுமிதான் அண்மைக் காலமாக ரகுலுக்கு கற்றுத் தருகிறாராம். இதற்காக சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் நன்றி தெரிவித்துள்ளார் ரகுல்.
இந்நிலையில் இருவரும் சைக்கிள் ஓட்டும் பயிற்சியிலும் ஈடுபடத் துவங்கி உள்ளனர். நீண்ட தூர சைக்கிளிங் பயிற்சியில் ஈடுபடும் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற்றது குறித்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார் ரகுல் பிரீத்சிங்.
அண்மையில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு இடைவிடாமல் சைக்கிள் ஓட்டிச் சென்றாராம்.
"பயிற்சி முடிந்த பிறகு மிகவும் உற்சாகமாக உணர்ந்தேன். இப்படிப்பட்ட பயிற்சிகள் புத்துணர்ச்சி அளிக்கும். மேலும், மனதில் ஒருவிதத் தெளிவையும் ஏற்படுத்தும்.
"என்னைக் கேட்டால், தினமும் இவ்வாறு பயிற்சி பெறுவது ஒருவரது தனிப்பட்ட ஆற்றலைப் பன்மடங்கு அதிகரிக்கும் என்று உறுதியாகச் சொல்வேன்," என்கிறார் ரகுல் பிரீத்சிங்.
அடுத்தகட்டமாக 100 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட உள்ளாராம்.
முதல் முயற்சியிலேயே லட்சுமி மஞ்சுவும், ரகுலும் 30 கிலோ மீட்டர் தூரத்தை அனாயாசமாகக் கடந்தது தங்களை ஆச்சரியப்படுத்தியதாக இவர்களது சக வீரர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தக் குழுவில் இவர்கள் இருவர் மட்டுமே பெண்களாம்.
நடிகர்கள் ஆர்யா, விவேக் உள்ளிட்டோரும் சைக்கிள் பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள். ஆர்யா வெளிநாடுகளில் நடக்கும் சைக்கிள் போட்டிகளில் கூட பங்கேற்று வருகிறார்.
நடிகர் விவேக் வாய்ப்பு கிடைத்தால் அதிகாலை வேளையில் தனக்கு மிக நெருக்கமான நண்பர்கள் சிலருடன் சில மணி நேரம் சைக்கிளோட்டம் மேற்கொள்வது வழக்கம்.
ஊரடங்கு முடிந்ததும் சென்னையில் மீண்டும் சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட ஆர்வத்துடன் காத்திருப்பதாகச் சொல்கிறார் விவேக்.

