பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான்

பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான்

3 mins read
91af1841-2123-4029-a3d3-e9065faab88a
ஊரடங்கு வேளையில் பண்டிகை என்ற பெயரில் வெளியே சுற்றித் திரியக்கூடாது என்றும் அறிவுறுத்துகிறார் ஆத்மிகா. -

பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான். எனினும் கொரோனா கிருமித் தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில் விமரிசையான கொண்டாட்டங்களைத் தவிர்த்து அடக்கி வாசிப்பது நல்லது என்கிறார் நடிகை ஆத்மிகா.

இவரைப் பொறுத்தவரை பிள்ளையார் சதுர்த்தி என்பது ஒரு விழா என்றால் கொழுக்கட்டை என்பது உணர்வுபூர்வமான விஷயம் என்கிறார். சிறு வயதில் பிள்ளையார் சதுர்த்தியை உற்சாகமாகக் கொண்டாடுவாராம்.

"எங்கள் வீட்டில் அம்மா வகை வகையாக சமைத்து வைப்பார். இனிப்பு மற்றும் காரக் கொழுக்கட்டைகள், வேறு சில இனிப்புகள், பாயாசம், சுண்டல் என்று மதிய உணவு களை கட்டும். நானும் அப்பாவும் கொழுக்கட்டைக்காக சண்டை போடுவோம். நான் கொழுக்கட்டை பிரியை.

"பொதுவாக பண்டிகை சமயத்தில் வீட்டில்தான் இருப்பேன். ஒருமுறை பிள்ளையார் சதுர்த்தியின்போது வெளியூரில் இருக்க நேர்ந்தது. ஆனால் அப்போதும் கொழுக்கட்டையை ருசிக்காமல் இருக்க முடியவில்லை.

"எனவே அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று வரிசையில் காத்திருந்து பிரசாதமாக வழங்கப்பட்ட கொழுக்கட்டையை வாங்கிச் சாப்பிட்டேன்.

"கொழுக்கட்டைகள் இல்லாமல் பிள்ளையார் சதுர்த்தி முழுமை பெறாது," என்று சொல்லும் ஆத்மிகா பண்டிகை என்றாலே குடும்பத்துடன் இணைந்திருப்பதுதான் என்கிறார்.

இவரது தந்தை காலமாகி விட்டதால் இந்தாண்டு பிள்ளையார் சதுர்த்தியின்போது வெறுமையாக உணரத் தோன்றுகிறதாம்.

"இந்த ஊரடங்கு வேளையில் சமையல் கற்றுக் கொண்டேன். எனினும் பல்வேறு மேற்கத்திய உணவு வகைகளைச் சமைக்க கற்றுக்கொண்ட நான் இரு தினங்களுக்கு முன்பு வரை கொழுக்கட்டை செய்யத் தெரியாமல் விழித்தேன். பிறகுதான் நம் பாரம்பரிய உணவு வகைகளை மறந்துவிட்டோம் என்பதை உணர முடிந்தது.

"மேற்கத்திய உணவுகளை சமைக்க முடியும் என்றால் கொழுக்கட்டை சமைக்க முடியாதா? நமது பாரம்பரியத்தை, கலாசாரத்தை மறந்துவிடக்கூடாது," என்று சொல்லும் ஆத்மிகா தாமே கொழுக்கட்டை சமைப்பதுதான் இந்தாண்டின் சிறப்பம்சம் என்று சிரிக்கிறார்.

மேலும் பிள்ளையார் சிலைகளை கடற்கரையிலும் நீர்நிலைகளிலும் கரைப்பதை இவர் விரும்பவில்லை. இத்தகைய பழக்கம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் என்கிறார்.

"நம் முன்னோர்கள் இப்படிச் செய்தனர் என்றால் அந்நாட்களில் அப்படியொரு தேவை இருந்திருக்கும். ஆனால், இப்போது இயற்கையுடன் ஒத்துப்போகும் களிமண் சிலைகளை நாம் செய்வதில்லை. பலவித ரசாயனங்களைப் பயன்படுத்துகிறோம். எனவேதான் சுற்றுச்சூழல் மாசடைகிறது.

"சிறுவயதில் வீட்டில் சாமி கும்பிட்ட கையோடு என் தோழி ஒருவரது வீட்டுக்குச் சென்றுவிடுவேன். அங்கு பிரமாண்டமான சிலையை வைத்து பூசை நடத்திக் கொண்டாடுவார்கள்," என்று சொல்லும் ஆத்மிகா, இந்தாண்டு அனைவரும் வீட்டில் இருந்தபடியே பாதுகாப்பாக பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

ஊரடங்கு வேளையில் பண்டிகை என்ற பெயரில் வெளியே சுற்றித் திரியக்கூடாது என்றும் அறிவுறுத்துகிறார்.

"உடல்நலத்துக்கும் குடும்பத்தாரின் பாதுகாப்புக்கும்தான் நாம் முன்னுரிமையும் முக்கியத்துவமும் அளிக்கவேண்டும் என்கிறார். அதைவிட பெரிய விஷயம் ஏதுமில்லை. நாம் பாதுகாப்பாக இருப்பதுடன் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் நலனிலும் அக்கறை கொள்ள வேண்டும்.

"அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நாம் முடிந்தளவு ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய முடியும்," என்கிறார் ஆத்மிகா.

தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தலா ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருப்பவர், அதிக படங்களில் நடிக்கவேண்டும் என்று தாம் ஒருபோதும் விரும்பியதில்லை என்கிறார்.

தரமான கதைகளில், மக்களை மகிழ்விக்கும் படங்களில் நடித்தால் அதுவே போதுமானது என்பவர் சம்பள விஷயத்திலும் கறார் காட்டாத நடிகை எனும் நல்ல பெயரைச் சம்பாதித்துள்ளார்.