படங்கள் இயக்குவதைவிட நடிப்பில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார் சமுத்திரக்கனி. காரணம் அந்தளவுக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வருகின்றன.
ஊரடங்கு காரணமாக தற்போது வீட்டில் ஓய்வை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். சின்னத் திரையிலிருந்து சினிமாவுக்கு வந்து வெற்றி பெற்றவர்களில் இவரும் ஒருவர்.
சமுத்திரக்கனிக்கு இரண்டு வாரிசுகள். மகன் கல்லூரியில் படிக்கிறார். மகள் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். தன் அக்காள் மகள் ஜெயலட்சுமியைதான் திருமணம் செய்துகொண்டுள்ளார் கனி.
தன் அம்மாவுக்குப் பிறகு தனக்கு மனைவிதான் எல்லாம் என்று நெகிழ்பவர் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருப்பதாகச் சொல்கிறார்.
சமுத்திரக்கனி பாலசந்தரின் உதவியாளர் என்பது தெரிந்த விஷயம். இன்று சினிமாவில் தாம் சாதித்துக் கொண்டிருப்பதற்கு அவரிடம் பெற்ற பயிற்சியும் உடன் பணியாற்றிய அனுபவமும்தான் காரணம் என்கிறார்.
இயற்கை தீர்மானித்து விட்டால் அதற்கு மனிதன் உடன்பட்டுதான் ஆகவேண்டும் என்று சொல்லும் சமுத்திரக்கனி, கால அட்டவணையில் பின்னோக்கிச் செல்வதற்கான பொத்தானை இயற்கை தேர்வு செய்துவிட்டால் எல்லோரும் பின்னோக்கிப் போகவேண்டி இருக்கும் என்கிறார்.
"அப்படிப்பட்ட ஒரு சூழலைதான் கொரோனா இப்போது ஏற்படுத்தி இருக்கிறது. அதற்காக புலம்ப வேண்டிய அவசியமில்லை. இதையும் நல்ல அனுபவமாக எடுத்துக்கொள்ள வேண்டும்," என்று சொல்பவர், கவிஞர் வாலியை வைத்து தொலைக்காட்சி தொடரை இயக்கிய அனுபவத்தை மறக்கவே இயலாது என்கிறார்.
"அண்ணி' என்ற தலைப்பில் உருவான நெடுந்தொடரில் நடிக்கக் கேட்டு கவிஞரை அணுகினேன். ஆனால் அவரோ, 'சின்னப் பசங்க சொல்லிக் கொடுத்து என்னால் நடிக்க முடியாது. பாலசந்தர் இயக்கினால் மட்டுமே நடிப்பேன்' என்று சொல்லிவிட்டார். இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடந்தபிறகு பாலசந்தர் சாருக்குக் காய்ச்சல். எனவே படப்பிடிப்புக்கு அவர் வராததால் நான்தான் காட்சிகளைப் படமாக்கினேன். 'வாலியை கவனமாகக் கையாள வேண்டும். சட்டெனக் கோபம் வந்துவிடும்' என்று இயக்குநர் என்னை எச்சரித்தார்.
"மறுநாள் படப்பிடிப்புக்கு வாலி சார் வந்ததும் 'இன்னும் நேரமிருக்கிறது. வேண்டுமானால் வெற்றிலை போட்டுவிட்டு வந்துவிடுங்கள்' என்றேன். அப்படியா என்று கேட்டுவிட்டு சற்று நேரம் எடுத்துக் கொண்டார். பிறகு அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டுமே படமாக்கினேன்.
"மீண்டும் ஒருமுறை வெற்றிலை போடுவதானால் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள் என்றதும் அவருக்குத் திருப்தியாகி விட்டது. சற்று நேரம் எடுத்துக் கொண்டவர் படப்பிடிப்பு முடிந்த கையோடு பாலசந்தர் சாரை தொடர்பு கொண்டார்.
"'நீங்கள் இங்கே வரவேண்டாம். சமுத்திரகனியே என்னை நன்றாகக் கவனித்துக் கொள்கிறான். நான் இவனிடமே நடிக்கிறேன்' என்று கூறிவிட்டார். அதன்பிறகு என்னுடன் நன்றாகப் பழகினார்," என்கிறார் சமுத்திரக்கனி.
அண்மையில் விஜயகாந்தைச் சந்தித்தாராம். அவரைப் போன்ற ஈரம் நிறைந்த மனிதரைப் பார்த்ததில்லை என்கிறார்.
இயக்குநர் ராஜமவுலியுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார் சமுத்திரக்கனி. ராஜமவுலிக்குக் கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டதை அறிந்ததும் சென்னையிலிருந்து சில சித்த மருந்துகளை அனுப்பி வைத்தாராம்.
"நாடோடிகள்' படத்தைப் பார்த்துவிட்டு என்னைத் தொடர்பு கொண்டு பேசினார் ராஜமவுலி. இப்படிப்பட்ட பதற்றமான திரைக்கதை எனக்குப் புதிது என்று பாராட்டினார். பதிலுக்கு நானும் அவரது 'மகதீரா' படத்தைப் பார்த்து மிரண்டு போயிருப்பதாகத் தெரிவித்தேன்.
"பிறகு அவ்வப்போது நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறோம். அதன்பிறகு தனது இயக்கத்திலேயே நடிக்கும் வாய்ப்பைத் தந்திருக்கிறார்.
"கொரோனா கிருமித் தொற்றிலிருந்து விடுபட்டதும் தகவல் அனுப்பினார். 'எங்கிருந்தாலும் ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்து கொள்கிறோம். இதுவே அதிக மகிழ்ச்சியை தருகிறது' என்று கைபேசியில் குறுந்தகவல் அனுப்பினார்," என்று சொல்லும் சமுத்திரக்கனி தற்போது 'இந்தியன்-2'இல் நடித்து வருகிறார்.

