ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 25ஆவது படம் 'பூமிகா'. ரதீந்திரன் பிரசாத் இயக்குகிறார்.
படம் குறித்த அறிவிப்பு வெளியான உடனேயே திரையரங்குகளில் வெளியாகுமா அல்லது நேரடியாக இணையத்தில் வெளியிடப்படுமா? என்று கேட்கிறார்களாம்.
இன்னும் அதுகுறித்தெல்லாம் முடிவெடுக்கவில்லை என்று சொல்லும் ரதீந்திரன் பிரசாத், முதலில் படத்தைத் திட்டமிட்டபடி எடுத்து முடிப்பதில்தான் முழு சிந்தனையும் இருப்பதாகக் கூறுகிறார்.
எனினும் சூழ்நிலை சரியாக அமையும் பட்சத்தில் எந்த ஒரு படைப்பாளியும் தனது படைப்பைத் திரையரங்கில் வெளியிடவே விரும்புவார் என்கிறார்.
இந்நிலையில் வித்தியாசமான கதைக்களத்தில் நடிப்பது உற்சாகம் அளிப்பதாக சொல்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
முதன்முறையாக இப்படத்தில் மனநல மருத்துவராக நடித்துள்ளாராம்.
பரபரப்பான ஒரு நகரின் மையப்பகுதியில் புதிதாக ஒரு கட்டடத்தைக் கட்டி முடிக்கும் பணியில் கட்டடக்கலை நிபுணர்கள் ஈடுபடுகின்றனர். ஆனால், பத்தாண்டுகளாகியும் அந்தப் பணிமுடிவடையாமல் இழுத்தடிக்கிறது.
இதற்கிடையே இந்தப் பணிக்குப் பொறுப்பேற்கும் நிபுணர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள். இந்த விவகாரம் மனநல நிபுணரான ஐஸ்வர்யாவின் காதுகளுக்கு வந்து சேருகிறது.
இது தொடர்பாக அவரது உதவியைக் கோருகிறார் அவரது கணவர். இதையடுத்து கட்டடப் பணியில் நிலவும் மர்மத்தை துப்பறிந்து பிரச்சினையைத் தீர்த்து வைக்கிறார் ஐஸ்வர்யா.
"இது எனக்கு 25ஆவது படம். கனமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளேன். இயக்குநர் ரதீந்திரன் நல்ல நண்பர். மேலும் திறமையான இயக்குநர். பொதுவாக கதையும் எனக்கான கதாபாத்திரமும் பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறேன்.
"அப்படி ஏற்றுக்கொண்ட அந்தப் படங்களை 'பூமிகா'வும் ஒன்று. இதில் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்கு ஏற்ப நடித்திருப்பது திருப்தி அளிக்கிறது," என்கிறார் ஐஸ்வர்யா.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஊட்டியில் நடைபெற்றதாம். 35 நாட்கள் இரவு பகலாக உழைத்து படப்பிடிப்பை முடித்துள்ளனர்.
அடுத்து இவர் சரித்திரப் படம் ஒன்றில் நடிக்க விரும்புகிறாராம். மேலும் பிரபலங்களின் வாழ்க்கையை முழுமையாகப் படம் பிடித்துக் காட்டும் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கவேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்.
"இதுவரை என் மனதில் உள்ள நீண்ட நாள் ஆசை ஒன்றை நான் வெளிப்படுத்தியதே இல்லை. இப்போது அதற்கான நேரம் வந்துள்ளது. காரணம், எனக்குரிய ஒரு கதாபாத்திரத்தைத் தேர்வு செய்யும் அளவுக்கு நான் பக்குவமான நடிகையாகி விட்டதாக உணர்கிறேன்.
"நடிகை ஆச்சி மனோரமா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. அந்தப் படத்தின் மூலம் இந்திய திரைப்பட தேசிய விருதைப் பெறவேண்டும் என்றும் விரும்புகிறேன். இந்த ஆசை நிறைவேறி விருதும் கிடைத்தால் அதைவிட என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம் இருக்க முடியாது.
"இப்படியொரு வாய்ப்பு நிச்சயமாக கூடிய விரைவில் அமையும் என நம்புகிறேன். அதற்காகக் காத்திருக்கிறேன்," என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
சக நடிகர், நடிகைகளின் திறமையை மெச்சுவதிலும் அவர்கள் நடிக்கும் படங்கள் நன்றாக இருந்தால் பாராட்டி மெச்சுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார் இவர்.
அந்த வகையில் விஜய் சேதுபதியும் ஷ்ருதிஹாசனும் இணைந்து நடித்துள்ள 'லாபம்' படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"சேதுபதியும் ஷ்ருதியும் எனது நட்பு வட்டத்தில் உள்ள நல்ல நண்பர்கள். ஜனநாதன் சார் இயக்கும் படங்கள் எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.
"இந்தக் குழு நிச்சயம் தரமான படைப்பை வழங்கும். இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகள்," என்று இன்ஸ்டகிராமில் குறிப்பிட்டுள்ளார் ஐஸ்வர்யா.