'சூரரைப் போற்று' நேரடியாக இணையத்தில் வெளியாவது கோடம்பாக்கத்தில் சில தரப்பினருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
சூர்யா சுயநலக்காரர் என்று ஒருதரப்பு கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் இணையத்தில் வெளியிடுவதன் மூலம் அவருக்கு அப்படியென்ன லாபம் கிடைத்துவிடப் போகிறது எனும் கேள்வியும் எழுந்துள்ளது.
நஷ்டமடைந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுடன்தான் தன் படத்தை இவ்வாறு வெளியிட முடிவு செய்தாராம் சூர்யா.
கடந்த ஏப்ரல் மாதம் 'பொன் மகள் வந்தாள்' படத்தை இணையத்தில் வெளியிட்டபோதே பிரபல அமேசான் நிறுவனம் 'சூரரைப் போற்று'க்கும் கணிசமான தொகையை அளிப்பதாக பேச்சுவார்த்தை நடத்தியதாம். ஆனால், படத்தை விற்பது குறித்து ஆகஸ்ட் மாத இறுதியில் முடிவு செய்யலாம் என 'சூரரைப் போற்று' குழு பதிலளித்தது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக செப்டம்பர் இறுதி வரை திரையரங்குகள் திறக்கப்படுவது சந்தேகம்தான் எனும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் 40 விழுக்காடு பார்வையாளர்கள்தான் உள்ளே அமரமுடியும் என்பதோடு பல்வேறு நிபந்தனைகளைப் பின்பற்றவேண்டிய கட்டாயமும் நிலவுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் திடீர் திருப்பமாக சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டபோது கூட்டம் கூடவில்லை என்பது திரையுலகத்தினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
கொரோனா கிருமி விவகாரத்துக்கு முன்பு இருந்த விற்பனைகூட இப்போது இல்லையாம்.
கிருமித் தொற்றுக்குப் பயந்து மக்கள் வெளியில் நடமாடுவது குறைந்திருப்பதற்கு மதுக்கடையில் கூட்டம் குறைந்ததும் உதாரணமாகி விட்டது.
எனவே, திரையரங்குகளுக்கு ரசிகர்கள் கூட்டம் எதிர்பார்த்த அளவில் கூடுமா எனும் சந்தேகம் எழுவதாக கோடம்பாக்க விவரப்புள்ளிகள் சிலர் சூர்யாவிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்தே படத்தை இணையத்தில் வெளியிடுவது என அவர் தீர்மானித்ததாக கூறப்படுகிறது.
'சூரரைப் போற்று' படத்தின் மொத்த பட்ஜெட் சூர்யாவின் சம்பளமில்லாமல் 40 கோடி என்கிறார்கள். சூர்யாவின் சம்பளம் சுமார் 15 கோடி ரூபாய் என்பதுடன் தெலுங்கு உரிமமும் சேர்ந்தது. அதையும் சேர்த்தால் சுமார் 30 கோடி ரூபாய் வரும் என்கிறார்கள்.
இந்தத் தொகையில் சில கோடிகளை விட்டுக்கொடுத்தே இணையத்தில் படத்தை வெளியிட இவர் முன்வந்துள்ளாராம்.
எனினும் அமேசான் நிறுவனம் 50 கோடி ரூபாய்க்குப் பட வெளியீட்டு உரிமத்தை வாங்கியிருப்பதாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
செயற்கைக் கோள் ஒளிபரப்பு மதிப்பு 25 கோடி ரூபாய்க்கு விலை போயுள்ளது. இந்தி உரிமமும் கணிசமான தொகைக்கு விலை போயிருப்பதால்தான் கிடைக்கும் லாபத்தில் 5 கோடி ரூபாயைத் தேவை உள்ளவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப் போவதாக சூர்யா தெரிவித்துள்ளார் என ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

