'ஹிப்ஆப்' தமிழா ஆதியின் இசைத்தொகுப்புக்கு நல்ல வரவேற்பு

'ஹிப்ஆப்' தமிழா ஆதியின் இசைத்தொகுப்புக்கு நல்ல வரவேற்பு

3 mins read
bd934822-cf78-40be-9988-714652df6290
தாம் ஒரு தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் மிகுந்த பெருமை அடைவதாக குறிப்பிடுபவர் மறுபக்கம் தமிழன், கன்னடர், தெலுங்கர் என்று இந்தச் சமூகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக முத்திரை குத்தப்படுவதைத் தாம் விரும்பவில்லை என்கிறார் ஹிப்ஆப் ஆதி. படம்: ஊடகம் -

நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'நான் ஒரு ஏலியன்' எனும் தலைப்பில் இசைத்தொகுப்பு வெளியிட்டுள்ளார் 'ஹிப்ஆப்' தமிழா ஆதி. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பாம்.

ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ஓர் இசைத் தொகுப்பாவது வெளியிட வேண்டும் என்பதே தமது விருப்பம் என்கிறார் ஆதி. எனினும் திரைத்துறையில் கூடுதல் கவனம் செலுத்தியதால் தனது இலக்கை சாத்தியமாக்க அதிகம் சிரமப்பட வேண்டியுள்ளதாகச் சொல்கிறார்.

"இந்த ஆண்டாவது இலக்கை எட்டிப்பிடிக்க வேண்டும் என்றுதான் ஜனவரி மாதமே பணிகளைத் துவங்கினேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக கொரோனா விவகாரம் அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது.

"எனவே 'ஹிப்ஆப் தமிழா-2' என்ற இசைத் தொகுப்புக்குப் பதிலாக இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப ஓர் இசைத்தொகுப்பை உருவாக்கி உள்ளோம்," என்கிறார் ஆதி.

தாம் ஒரு தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் மிகுந்த பெருமை அடைவதாக குறிப்பிடுபவர் மறுபக்கம் தமிழன், கன்னடர், தெலுங்கர் என்று இந்தச் சமூகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக முத்திரை குத்தப்படுவதைத் தாம் விரும்பவில்லை என்கிறார். இவ்வாறு பிரித்துப் பார்ப்பதற்கு பதிலாக அனைத்தில் இருந்தும் ஒதுங்கி நிற்கவே விரும்புகிறாராம். இவ்வாறு அந்நியப்பட்டு நிற்கவேண்டி உள்ளது என்பதைக் குறிக்கும் விதமாகத்தான் 'நான் ஒரு ஏலியன்' (வேற்றுக் கிரகவாசி) என்ற தலைப்பை தேர்ந்தெடுத்ததாகச் சொல்கிறார்.

சமூகத்தைப் பாதிக்கக்கூடிய விஷயங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க ஆதி தயங்கியதில்லை. அதேசமயம் விமர்சனங்களையும் தைரியமாக எதிர்கொள்கிறார். அண்மையில் அனைவரும் நிலவேம்பு கஷாயம் குடிக்கவேண்டும் என அறிவுறுத்தி இருந்தார். ஆனால், இதை சிலர் கடுமையாக விமர்சித்தனர்.

"மத்தியில் உள்ள ஆயுஷ் அமைச்சு செய்துள்ள பரிந்துரையை நானும் வழிமொழிந்தேன். எனது இந்தப் பரிந்துரையை பொதுமக்கள் தவறான கோணத்தில் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகவே காணொளிப் பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தேன்," என்று சொல்லும் ஆதி தன்மீது தவறு இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கவோ, மன்னிப்பு கேட்கவோ எப்போதுமே தயங்கியதில்லை என்கிறார்.

"நான் உருவாக்கிய ஒரு பாடல் சிலரால் விமர்சிக்கப்பட்டபோது மன்னிப்புத் தெரிவிக்க தயங்கவில்லை. இதுபோன்ற விமர்சனங்களும் சில சம்பவங்களும் என்னை அச்சுறுத்தியதில்லை. மாறாக, இதுபோன்ற அனுவபங்கள் கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன். ரசிகர்களின் அன்பும் அங்கீகாரமும் இல்லை என்றால் நான் உருவாகியிருக்க முடியாது.

"வெறுப்பை வெளிப்படுத்துபவர்கள் தவிர்க்க முடியாதவர்கள் என்பதை எனது அனுபவத்தின் மூலம் புரிந்து கொண்டிருக்கிறேன். எனினும் நம் திறமையையும் பணியையும் நன்கு அறிந்தவர்களின் எண்ணிக்கை நம்மைக் குறை கூறுபவர்களை விட அதிகமாக இருப்பது மகிழ்ச்சி தருகிறது," என்று சொல்லும் ஆதி தனது திரையுலகப் பயணத்திலும் அடுத்தடுத்த நகர்வுகளைத் திட்டமிட்டு மேற்கொள்கிறார்.

இயக்குநர் ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் உருவாகும் 'தனி ஒருவன்' இரண்டாம் பாகத்தில் ஆதி பணியாற்றுவார் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக ராஜா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை என்று குறிப்பிடுபவர், 'ராஜா அண்ணா' நிச்சயம் தம்மை அழைப்பார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறாராம்.

"அடுத்து சத்தியஜோதி நிறுவனத்தின் புதுப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். படங்கள் இயக்க வேண்டும் என்பதும் என் விருப்பம்.

"அதற்கான சில பணிகளும் ஒருசேர நடந்து வருகின்றன. நான் நடிக்கும் அல்லது பணியாற்றும் ஒவ்வொரு படத்தையும் எனது கடைசி வாய்ப்பாகவே கருதுகிறேன். காரணம் ஒரே ஒரு படம் தோல்வி கண்டாலும் நாம் பள்ளத்தில் விழுந்ததற்கு சமம். எனவேதான் ஒவ்வொரு படத்திலும் என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுக்கப் பார்க்கிறேன்," என்கிறார் ஆதி.