தமிழகத்தில் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் 'சூரரைப் போற்று' படத்தைப் பின்தொடர்ந்து மேலும் சில முன்னணி நடிகர்களின் படங்களும் இணையத்தில் நேரடியாக வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
தனுஷ் நடித்துள்ள 'ஜெகமே தந்திரம்' படம் இணைய வெளியீட்டிற்குத் தயாராக இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
முழுக்க முழுக்க லண்டனிலேயே படமாக்கப்பட்டிருக்கும் 'ஜெகமே தந்திரம்' படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 70 கோடி ரூபாய் என்கிறார்கள். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.
இணையத்தில் நேரடியாக வெளியிட தயாரிப்பாளர் சசிகாந்த் ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பே சம்மதம் தெரிவித்து விட்டாராம். எனினும் படத்தின் சில பணிகள் இன்னும் முடிந்தபாடில்லை.
குறிப்பாக கணினி சார்ந்த தொழில்நுட்பப்பணிகள் எதிர்பார்த்தது போல் அமையவில்லையாம். இதனால் அப்பணிகள் மீண்டும் நடைபெற்று வருகின்றன.
தீபாவளிக்குள் படத்தை வெளியிட முடியும் என்கிறது தயாரிப்புத் தரப்பு. இணைய வெளியீட்டு நிறுவனங்கள் தனுஷ் படம் என்பதால் நல்ல தொகையைக் கொடுக்க முன்வந்திருப்பதாகத் தகவல்.
நயன்தாரா நடித்துள்ள 'மூக்குத்தி அம்மன்' படமும் வெளியீடு காணத் தயாராக உள்ளது. எனினும் பக்திப்படம் என்பதால் ரசிகர்கள் திரையரங்கில் காண்பதையே விரும்புவார்கள் என்றும் அப்போதுதான் படம் பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேசும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியும் கருதுகின்றனர். நேரடியாக இணையத்தில் படத்தை வெளியிடுவதில் இருவருக்குமே உடன்பாடு இல்லையாம்.
விஜய் சேதுபதி நடித்துள்ள 'க/பெ ரணசிங்கம்', ஜெயம் ரவியின் 'பூமி', ஆர்யாவின் 'டெடி', விஷ்ணு விஷாலின் 'காடன்' ஆகிய படங்களும் வெளியீடு காணத் தயாராக உள்ளன. ஆனால், இவற்றுக்குத் தயாரிப்பாளர் தரப்பு எதிர்பார்த்த தொகையைத் தருவதற்கு இணைய வெளியீட்டு நிறுவனங்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
அதனால் இருதரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நீடித்து வருகின்றன. தீபாவளிக்குள் உடன்பாடு ஏற்பட்டால் திரையரங்குகளில் வெளியிடுவதைப் போல் இணையத்திலும் பண்டிகை காலக் கொண்டாட்டமாக நான்கைந்து படங்கள் வெளியாகும் வாய்ப்புண்டு என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.
நேரடியாக இணையத்தில் படத்தை வெளியிட வேண்டாம் என்று சூர்யாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் இயக்குநர் ஹரி. ஆனால் அந்த முடிவில் மாற்றம் இல்லை என சூர்யா தரப்பு திட்டவட்டமாகக் கூறிவிட்டதாம்.
இதனால் வருத்தமடைந்துள்ள ஹரி, சூர்யாவை வைத்து இயக்கவிருந்த 'அருவா' படத்தைக் கைவிடப் போவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அவர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. சூர்யா தரப்பிலும் அமைதியே நிலவுகிறது.
"தற்போதைய சூழலில் சூர்யா எதையும் வெளிப்படையாகச் சொல்லமாட்டார். எனவே, ஹரியே வாய் திறந்து 'அருவா'வைக் கீழே போட்டால்தான் உண்டு," என்று சொல்லும் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள், இணைய வெளியீட்டுப் பிரச்சினையால் இதுபோன்ற பிணக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்கிறார்கள்.
இதற்கிடையே பிரபல இணைய வெளியீட்டு நிறுவனங்களுக்காக இணையத் தொடர்களை இயக்குவதில் முன்னணி இயக்குநர்கள் முனைப்பாக உள்ளனர்.
அதிலும் ஒரே சமயத்தில் நான்கைந்து இயக்குநர்கள் சேர்ந்து வெவ்வேறு கதைகளை இயக்கி அவற்றை மொத்தமாக தொகுத்து ஒரே திரைப்படமாக வெளியிடுவது அதிகரித்து வருகிறது. இத்தகைய முயற்சியை 'ஆந்தாலஜி' என்று குறிப்பிடுகிறார்கள்.
இயக்குநர்கள் வெற்றிமாறன், கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் சேர்ந்து ஆணவக் கொலை தொடர்பான ஒரு படத்தை இயக்கி உள்ளனர். இது அக்டோபரில் வெளியீடு காண்கிறது.
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் 9 இயக்குநர்கள் இயக்கும் 'நவரசா' என்ற 'ஆந்தாலஜி' படத்துக்கான பணிகளைத் துவங்கியுள்ளது.

