'காதல்' சந்தியா திரைப்படத்தில் நடித்து நான்கைந்து ஆண்டுகளாகி விட்டன. ஒரு குழந்தைக்குத் தாயான நிலையில் கோடம்பாக்கத்தில் மறுபிரவேசம் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் தமது முதல் சுற்றில் அதிகம் சாதிக்க முடியவில்லை என்ற வருத்தம் இன்றளவும் இருப்பதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ள அவர், தாம் எடுத்த சில தவறான முடிவுகள் பின்னடைவை ஏற்படுத்தி விட்டதாக ஒப்புக்கொள்கிறார்.
'சுப்பிரமணியபுரம்' படத்தில் நாயகியாக நடிக்கக் கேட்டு இயக்குநர் சசிகுமார் இவரைத்தான் முதலில் அணுகினாராம். ஆனால், அறிமுக இயக்குநரின் படத்தில் நடிக்க தயங்கிய சந்தியா மறுத்துவிட்டார்.
"சுவாதி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியலாமல் போனதற்காக இப்போதும் வருந்துகிறேன். சசிகுமார் சார் தேடி வந்து கதையைச் சொன்னார். எனக்கும் பிடித்திருந்தது. எனினும் தயங்கினேன்.
"வாய்ப்பை ஏற்க மறுத்ததால் சசிகுமார் சாருக்கு என் மீது கோபம், வருத்தம் இருந்திருக்கும். அவர் மனதைக் காயப்படுத்தி இருந்தால் அதற்காக மனதார மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்," என்று சொல்லும் சந்தியா, 16 வயதில் 'காதல்' படம் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தவர்.
இவரது இயற்பெயர் ரேவதி. அந்தப் பெயரில் ஏற்கெனவே ஒரு பிரபல நடிகை இருப்பதால், சந்தியா என்று பெயரை மாற்றிக்கொள்வோம் என்று 'காதல்' இயக்குநர் பாலாஜி சக்திவேல் கூற அதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
"பின்னர் ஒருநாள் 'காதல்' படத்தைத் தயாரித்த இயக்குநர் சங்கர் வீட்டுக்குச் சென்றிருந்தோம் அப்போது சங்கர் சாரின் மனைவி சந்தியா என்பது அவருக்குப் பிடித்தமான பெயர் என்றும் தாங்கள் தயாரிக்கும் முதல் படத்தில் அறிமுகமாகும் நாயகி என்பதால் எனக்கு அந்தப் பெயரைச் சூட்டியதாகவும் விவரித்தார்.
"அப்போதுதான் சந்தியா என்ற பெயரை அவர் பரிந்துரை செய்தார் என்பதே எனக்குத் தெரியவந்தது," என்று சொல்லும் 'காதல்' சந்தியா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் நடித்துள்ளார்.
இம்மொழிகளில் அறிமுகப் படங்கள் வெற்றி பெற்றாலும் அடுத்தடுத்த படங்கள் பெரிதாகப் பேசப்படவில்லை. இளம் வயதிலேயே நடிக்க வந்ததாலும் இவரது பெற்றோருக்கும் சினிமாவுக்கும் அறவே தொடர்பில்லை என்பதாலும் சில சமயங்களில் சரியாக முடிவெடுக்க முடியாமல் போனதாகச் சொல்கிறார்.
அப்படிப்பட்ட ஒரு தவறுதான் 'சுப்பிரமணியபுரம்' படத்தில் நடிக்க மறுத்தது என்கிறார்.
சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த பிறகு சின்னத்திரை தொடர்களில் நடிக்கத் துவங்கிய சந்தியா, திருமணத்துக்குப் பிறகு சினிமா பக்கம் எட்டிப்பார்க்கவே இல்லை. இந்நிலையில் திரைப்படங்கள், இணையத் தொடர்களில் நடிக்க விரும்புகிறாராம்.
நல்ல கதைகள், கதாபாத்திரங்கள் கிடைத்தால் மீண்டும் தனது திறமையை நிரூபிக்கத் தயார் என்கிறார்.

