'சூரரைப் போற்று' படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் திரையுலகத்தினருக்கு 1.5 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளார் சூர்யா. இப்படம் வரும் அக்டோபர் 30ஆம் தேதி நேரடியாக இணையத்தில் வெளியாக உள்ளது.
திரையரங்க உரிமையாளர்கள், விநியோகிப்பாளர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தில் 5 கோடி ரூபாய் தேவை உள்ளவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்று சூர்யா அறிவித்திருந்தார்.
அதன்படி திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்திற்கு ஒரு கோடி ரூபாயும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு 30 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கும் 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்வுக்கு இயக்குநர் பாரதிராஜா தலைமை ஏற்க, நடிகர் சிவகுமார் முன்னிலை வகித்தார். மீதமுள்ள தொகை எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என சூர்யா தரப்பு தெரிவித்துள்ளது.
தமிழில் ஒரு திரைப்படம் வெளியாகும் முன்பே அதன் லாபத்தின் ஒரு பகுதியைக் கொண்டு இவ்வாறு நிதியளிக்கப்படுவது இதுவே முதல் முறை.
அந்த வகையில் 'சூரரைப் போற்று' தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றாக மாறியுள்ளது என்று பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
இப்படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிடுவது என்று தைரியமாக முடிவெடுத்து செயல்பட்டதற்காக சூர்யாவுக்கு திரையுலகைச் சேர்ந்த ஒருதரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

