ஊரடங்கால் திரையுலகமும் முடங்கியுள்ளது. இது ஒரு வகையில் வருத்தம் அளித்தாலும் முன்னணி நடிகர், நடிகையரைப் பொறுத்தவரை அதிகமான கதைகளைக் கேட்டு பல நிறுவனங்களுடன் கலந்து பேசி அடுத்த சில ஆண்டுகளுக்கான திட்டங்களை விரிவாகத் தயாரிக்க முடிந்திருப்பது சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிப்பது என முடிவு செய்துள்ளாராம்.
தற்போது 'டாக்டர்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவா. மற்றொருபக்கம் 'அயலான்' படத்திலும் நடிக்கிறார். இந்த இரு படங்களுமே ஊரடங்கால் பாதியில் நிற்கிறது. இரண்டில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'டாக்டர்'தான் முதலில் வெளியாகுமாம்.
ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் முதலில் இந்தப் படப்பிடிப்பில்தான் சிவா பங்கேற்க உள்ளார். அதன்பிறகுதான் 'அயலான்' பட வேலைகளைத் தொடங்க உள்ளனர்.
இந்நிலையில் அடுத்த இரு படங்களில் யாருடன் பணியாற்றுவது என்று நீண்ட ஆலோசனைக்குப் பிறகு முடிவு செய்துள்ளார் சிவா. அவர் தேர்வு செய்துள்ள முதல் இயக்குநர்தான் தேசிங்கு பெரியசாமி.
இவர் துல்கர் சல்மான், ரிதுவர்மா நடித்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கியவர். இந்தாண்டு துவக்கத்தில் வெளியாகி இளையர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது இப்படம். மற்றும் வசூல் ரீதியாகவும் எந்தக் குறையும் வைக்கவில்லை.
பல்வேறு தரப்பினரும் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியைப் பாராட்டிய நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அவர் பேசியது தொடர்பான ஒலிப்பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி தேசிங்கு பெரியசாமியை மேலும் பிரபலமாக்கி உள்ளது. தற்போது இவரும் சிவாவும் கூட்டணி அமைக்க உள்ளனர்.
இதற்கிடையே அண்மையில் வெளியான 'டாக்டர்' படத்தின் 'நெஞ்சமே' என்ற இரண்டாவது பாடலான நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு முன்பு அனிருத் இசையமைப்பில் வெளியான 'செல்லம்மா' என்ற முதல் பாடல் இணையத்தில் வெளியாகி இதுவரை 26 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
பாடலைப் போலவே படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என நம்பிக்கையுடன் கூறிவரும் சிவா அடுத்து பாண்டிராஜ் அல்லது தனது நண்பர் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாம். இதை அவரது தரப்பு உறுதி செய்யவில்லை என்றாலும் சிவாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இதுகுறித்துப் பேசி வருகிறார்கள்.
முன்னணி நடிகர் சிவாவின் நிலை இதுவென்றால், அறிமுக நடிகரான 'பிக்பாஸ்' முகேன் ராவும் படங்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருப்பதாகச் சொல்கிறார்.
'பிக்பாஸ்' மூன்றாவது சீசனில் வெற்றி பெற்ற கையோடு முகேன் ஒன்றிரண்டு படங்களிலாவது நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோது அவரது தந்தை காலமானார்.
அடுத்து கொரோனா ஊரடங்கு குறுக்கிட்டது. இதனால் அடுத்த கட்டத்துக்கு நகரமுடியாமல் தவித்து வந்தவர் தற்போது பெண் இயக்குநர் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். இவர் ஏற்கெனவே நானி, நித்யாமேனன் நடித்த 'வெப்பம்' படத்தை இயக்கியவர்.

