கொரோனா கிருமித்தொற்றில் இருந்து வெற்றிகரமாக மீண்டுள்ளார் நிக்கி கல்ராணி.
சிகிச்சைக்காகத் தனிமையில் இருந்தபோது தாம் எதிர்கொண்ட அனுபவங்களை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
கிருமித்தொற்று ஏற்படுபவர்கள் சிறிதும் பயப்பட வேண்டாம் என்றும் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தி உள்ளார் நிக்கி.
"அண்மைய சில மாதங்கள் உலக மக்கள் அனைவருக்குமே நெருக்கடியான காலகட்டமாகத்தான் உள்ளது. எங்கு திரும்பினாலும் அச்சம், பதற்றம்தான் காணப்படுகிறது. "எல்லாவற்றுக்கும் கொவிட்-19 நோய்தான் காரணம். எனவேதான் எனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். இதன் மூலம் மக்களின் அச்சம் ஓரளவு குறையும் என நம்புகிறேன்," என்கிறார் நிக்கி.
சில தினங்களுக்கு முன்பு லேசான காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி போன்ற அறிகுறிகள் நிக்கியிடம் தென்பட்டனவாம். இந்த அறிகுறிகள் ஐந்தாறு நாட்கள் நீடித்த நிலையில் எந்தவித சுவையையும் உணர முடியாமல் போயிருக்கிறது. நுகரும் தன்மையையும் இழந்து விட்டாராம்.
சுமார் இரண்டு வார காலம் நீடித்த இந்த அறிகுறிகளுக்குப் பிறகு வழக்கநிலைக்குத் திரும்பி விட்டார். எங்கு எப்படி தனக்கு தொற்று ஏற்பட்டது என்பது தெரியவில்லையாம்.
மருத்துவப் பரிசோதனையை செய்துகொள்ள சிலர் அஞ்சுவது ஏன் என்பதே தமக்குப் புரியவில்லை என்கிறார் நிக்கி. பரிசோதனையின் மூலம்தான் தொற்று இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படும் என்ற நிலையில் அதை வேண்டாம் என்று மறுப்பது எந்த வகையில் புத்திசாலித்தனம் என்றும் கேள்வி எழுப்புகிறார்.
"ஒருவேளை தொற்று இருக்கிறது என்று உறுதியாகிவிடுமோ என்று அஞ்சுகிறார்களா எனத் தெரியவில்லை. உறுதி செய்யப்பட்டால்தானே சிகிச்சை அளிக்க முடியும்? என்னைப் பொறுத்தவரை தொற்று உறுதியானதுமே என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன்.
"14 நாட்கள் தனிமையில் இருப்பது அப்படியொன்றும் சிரமமான விஷயமல்ல. ஏனெனில் இந்த நவீன காலத்தில் கைபேசி, தொலைபேசி, கணினி என்று அனைத்து வசதிகளும் உள்ளன. நமது நேசத்துக்கு உரியவர்களிடம் தினமும் பேசமுடியும். நேரில் பார்க்க முடியாதே தவிர அனைவருடனும் தொடர்பில்தான் இருக்கப் போகிறோம். எனவே பயப்படாமல் சிறு அறிகுறிகள் இருந்தாலும் உரிய பரிசோதனையைச் செய்துகொள்ளுங்கள் என்பதே எனது அறிவுரை," என்கிறார் நிக்கி.
இளம் வயதினரும் உடல்நலனை நன்றாக வைத்துக் கொள்பவர்களும் கவலைப்பட வேண்டியதில்லை என்று குறிப்பிடுபவர், வீட்டில் உள்ள முதியோரை யாரும் மறந்துவிடக்கூடாது என்கிறார்.
ஒருசிலர் அசட்டுத் தைரியத்தில் தங்களுக்குத் தொற்று ஏற்படாது என்ற முடிவுடன் ஊர் சுற்றுவதாகவும் அப்படிப்பட்ட சிலரைத் தாம் காண நேர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் நிக்கி கல்ராணி.
"அவர்களுக்கு நிலைமையின் விபரீதம் புரியவில்லை. கொரோனா எந்தவிதப் பேதமும் இன்றி அனைவரையும் ஆட்டுவிக்கிறது. எனவே, கவனமாக இல்லை என்றால் விளைவுளைச் சந்திக்க வேண்டும். அதேபோல் சுயமாக முடிவெடுத்து மருந்து மாத்திரைகளைச் சாப்பிடுவதும் தவறு.
"கொரோனா கிருமித்தொற்றை குணமாக்க அல்லது கட்டுப்படுத்த நிறைய மருந்துகள் உள்ளன. ஆனால், யாருக்கு எந்த மருந்து ஒத்துவரும் என்பது மருத்துவர்களுக்குத்தான் தெரியும். நாமாக முடிவு செய்யக்கூடாது.
"மருத்துவர்களும் களப்பணியாளர்களும் ஓய்வின்றி இரவு பகலாக உழைக்கிறார்கள். அவர்களுக்கு அன்பும் நன்றிக்கடனும் செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். அன்பு, தன்னம்பிக்கையை பகிருங்கள்," என்கிறார் நிக்கி.

