படப்பிடிப்பு இல்லாததால் எதையோ இழந்துவிட்டதாகத் தோன்றுகிறது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார் துருவ் விக்ரம்.
'ஆதித்ய வர்மா' படத்துக்குப் பிறகு அடுத்தகட்ட படங்களில் கவனம் செலுத்தலாம் என்று திட்டமிட்ட வேளையில் கொரோனா விவகாரம் இவரையும் முடக்கிப் போட்டுவிட்டது. இந்நிலையில் தமது டுவிட்டர் பக்கத்தில் ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார்.
"காலையில் தூங்கி எழுந்ததும் வழக்கமாக ஆறு மணிக்கு வரும் படப்பிடிப்புக்கான அழைப்புகள் இல்லை என்பதை உணர்ந்தேன். ஞாயிற்றுக்கிழமை படப்பிடிப்புகளையும் இழந்துவிட்டதாக உணர்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார் துருவ்.
மேலும் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்று ஆவலாகக் காத்திருப்பதாகவும் ஒரு காட்சி சரியாகப் படமாகும் வரை பல 'டேக்கு'களில் நடிக்க விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஊரடங்கின்போது தந்தை விக்ரமைப் போலவே கடுமையாக உடற்பயிற்சி செய்து உடலை மேலும் கட்டுக்கோப்பாக்கி உள்ளார் துருவ்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் 'சியான் 60' படத்தில் தந்தையுடன் இவரும் திரையைப் பகிர்ந்துகொள்ள இருக்கிறார். இது நிழல் உலக குழுக்களிடையே நிகழும் மோதல்களை மையமாக வைத்து உருவாகும் படம். முதன்முறையாக மகனுடன் இணைந்து நடிக்கும் உற்சாகத்தில் விக்ரமும் படப்பிடிப்பு துவங்கும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறாராம்.

