சிறு வயது முதலே தனக்கு எதுவும் எளிதாகக் கிடைத்துவிடாது, சாதகமாக ஏதும் நடந்துவிடாது என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
எல்லாவற்றுக்குமே ஏதேனும் ஒரு போராட்டத்தை எதிர்கொள்வாராம். போராடிப் பழகியதால் திரையுலகிலும் இக்கட்டான தருணங்களை தைரியமாக எதிர்கொண்டதாகச் சொல்கிறார்.
விக்ரமுடன் 'துருவ நட்சத்திரம்', விஜய் சேதுபதியுடன் 'க.பெ. ரணசிங்கம்', தெலுங்கில் நானியுடன் 'டக் ஜெகதீஷ்', அஸ்வினுடன் 'இது வேதாளம் சொல்லும் கதை' என்று வரிசையாகப் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா. மேலும் நாயகியை மையப்படுத்தி உருவாகும் 'பிளான் பி', 'திட்டம் 2' ஆகிய படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.
கொரோனா விவகாரம் காரணமாக எல்லாப் படங்களும் இவரது வருகைக்காக காத்துக் கிடக்கின்றன.
"நடிக்க வந்த புதிதில் வாய்ப்புகளுக்காக அல்லாடியிருக்கிறேன். ஒரு படத்தில் ஒப்பந்தமாவதற்குள் ஏகப்பட்ட தடைகள் வந்துவிடும்.
"இப்போதும் சில பிரச்சினைகள் உள்ளன. ஆனாலும் அவற்றை மீறி என் திறமை காரணமாக படங்களில் ஒப்பந்தமாகிறேன்," என்று சொல்லும் ஐஸ்வர்யாவிடம், தெலுங்கில் முன்னணி நாயகனான விஜய் தேவரகொண்டாவுடன் நடித்தது குறித்துதான் தோழிகள் அதிகம் விசாரிக்கிறார்களாம்.
ஊரடங்கின்போது அவரிடம் பேசினாரா, இல்லையா? மீண்டும் அவருடன் நடிக்கும் வாய்ப்பு உண்டா? என்பன போன்ற கேள்விகளுக்குப் பதிலளித்து அலுத்துவிட்டதாம்.
விஜய் தேவரகொண்டாவுடன் சம்பந்தப்பட்ட ஒரு படத்தில் நடித்ததை தம்மாலும்கூட நம்ப முடியவில்லை என்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
"விஜய் தேவரகொண்டாவுக்கு ரசிகைகள் எண்ணிக்கை அதிகம். அவர் படத்தில் நடிக்கப்போவது தெரிந்ததும் எனது தோழிகள் பலரும் படப்பிடிப்புக்கு வருவதாக நச்சரித்தனர். அவருடன் அறிமுகமாகி ஒரே ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டால் அதுவே போதும் என்று இடைவிடாமல் கோரிக்கை வைத்தவர்களை பொறுமையாக இருக்கச் சொல்லிவிட்டு படப்பிடிப்புக்குச் சென்றேன்.
"ஆனால் அங்கு நடந்ததைக் கேட்டால் என்னைக் கேலி செய்து சிரிப்பீர்கள் அல்லது நான் பொய் சொல்வதாக நினைப்பீர்கள். வேறொன்றுமில்லை, முதல் நாள் அவரைச் சந்தித்த அடுத்த நிமிடமே 'என் நண்பர்கள் எல்லோரும் உங்களுடன் செல்ஃபி எடுக்க ஆசைப்படுகிறார்கள். எப்போது வரச்சொல்லலாம்?' என்று என்னிடம் கேட்டு அதிர்ச்சி அடைய வைத்தார் விஜய்," என்று சிரிக்கிறார் ஐஸ்வர்யா. எனினும் பிறகு ஒருநாள் தன் தோழிகளின் ஆசையை நிறைவேற்றி வைத்தாராம்.
காதல், திருமணம் குறித்தெல்லாம் கேள்வி எழுப்பினால், இவர் தப்பித்து ஓடுவதில்லை. மாறாக, நம்மையே தனது பதில்களால் 'கலாய்த்து' விடுகிறார்.
"சிறு வயது காதல் அனுபவம் உள்ளதா என்று சில ரசிகர்கள் கேட்பதுண்டு. பள்ளியில் படிக்கும்போதே காதலில் விழுந்து விட்டேன். ஐந்தாம் வகுப்பில் இருந்தே இருவரும் நல்ல நண்பர்கள். 8ஆம் வகுப்பில் காதலித்தோம். ஆனாலும் 12ஆம் வகுப்பில் படிக்கும்போது ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு சுமூகமாகப் பிரிந்துவிட்டோம். அவ்வளவுதான் என் காதல்," என்று சொல்லும் ஐஸ்வர்யா, அடுத்த பிறவி என்று ஒன்று இருக்குமானால் ஆணாகப் பிறக்கத்தான் விரும்புகிறாராம்.
அதற்காக அவர் பெண்களை மட்டம் தட்டிவிட்டதாக அர்த்தம் அல்ல. பெண்ணாக இருப்பது பெருமை என்றாலும், ஓர் ஆணின் அனுபவங்களையும் வாழ்ந்து பார்த்து தெரிந்துகொள்ள விரும்புவதாகச் சொல்கிறார். கிசுகிசுக்களைப் படித்து இவர் கோபப்படுவதே இல்லை. ரசிப்பதாகச் சொல்கிறார்.
"ஒருமுறை பத்திரிகையில் வெளியான கிசுகிசுவைப் படித்ததும் 'அடடா அப்படி நடந்திருக்கலாமே?' என்று தோன்றியது. காரணம், அதை அவ்வளவு சுவாரசியமாக எழுதி இருந்தனர். 'ஐஸ் நடிகை அதுவேண்டும், இது வேண்டும் என்று கேட்கிறாராம். அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாம்' என்று அந்த கிசுகிசுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் படித்ததும் சிரித்துவிட்டேன். அப்படி நடந்தால் நன்றாக இருக்கும்.
"பள்ளியில் படிக்கும்போதே வேலை செய்தேன். தெருவில் அலைந்து திரிந்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் வேலையை செய்த அனுபவம் கூட உண்டு. இப்போது ஓரளவு சாதித்துவிட்டதாகத் தோன்றும் அதேவேளையில் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்," என்கிறார் ஐஸ்வர்யா.

