கொரோனா ஊரடங்கின் இறுதிக்கட்டம் (கிளைமாக்ஸ்) என்னவென்று தெரியாமலேயே உலக மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாக சொல்கிறார் நடிகரும் இயக்குநருமான பாண்டியராஜன்.
நடக்கப் போவதை மாற்ற முடியாது என்றாலும் கொரோனா விவகாரத்தால் இனி எதையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் எனும் மனப்பக்குவம் வந்திருப்பதாகச் சொல்கிறார்.
சிறுவயதில் படிப்பின்மீது இவருக்கு மிகுந்த ஆர்வமாம். ஆனால், குடும்பச் சூழ்நிலை காரணமாக பத்தாம் வகுப்புக்குப் பிறகு படிப்பைத் தொடர முடியவில்லை.
நடிகராக வேண்டும் எனும் ஆசையுடன் திரைத்துறைக்கு வரவில்லை என்றும் இயக்குநராவது மட்டுமே தனது கனவாக இருந்தது என்றும் சொல்கிறார்.
"பத்தாம் வகுப்பு முடிந்ததும் ஏதேனும் வேலையில் சேரும்படி அப்பா கூறினார். நான் படிக்க விரும்புவதாக சொன்னேன். அதற்கு, 'படித்துவிட்டு என்ன செய்யப் போகிறாய்?' என்று சொல்லிவிட்டார். சந்தர்ப்ப சூழ்நிலையால் நடிகராகி விட்டேன். பிறகு இயக்குநரானேன். இதெல்லாம் ஒரு கொடுப்பினைதான். ஆனாலும் படிப்பை விட்டுவிடவில்லை," என்று சொல்லும் பாண்டியராஜன், கடந்த 2004ஆம் ஆண்டு அஞ்சல் வழி 'எம்ஏ' பட்ட மேற்படிப்பை முடித்துள்ளார். பின்னர் 2007ஆம் ஆண்டில் 'எம்.ஃபில்', அதையடுத்து 'பிஎச்டி' (முனைவர்) பட்டமும் பெற்றுள்ளார்.
முனைவர் படிப்புக்கான ஆய்வுக்கு இவர் எடுத்துக்கொண்ட தலைப்பு 'தமிழ்த் திரைப்படக் கலைஞர்களின் சமுதாய பங்களிப்பு'. விரைவில் ஆய்வுக்காக திரட்டிய தகவல்களைப் புத்தகமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளார். ஏற்கெனவே 'தேடல்', தூக்கம் வராதபோது சிந்தித்த கருத்துகளை 'கற்றது விசில் அளவு' உள்ளிட்ட புத்தகங்களாக இவர் வெளியிட்டுள்ளார். மேலும் குறும்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறாராம்.
ஊரடங்கு வேளையில் சும்மா இருக்காமல் இணையம் வழி பலருக்கு திரைப்பட இயக்கம் தொடர்பாக வகுப்புகள் நடத்தி வருகிறார் பாண்டியராஜன். இவர் அண்மையில் இயக்கி வெளியிட்ட 'ஹெல்ப்' என்ற குறும்படத்தை 27 மில்லியனுக்கும் அதிகமானோர் இணையத்தில் பார்த்து ரசித்துள்ளனர்.
"இது என்னுடைய இரண்டாவது குறும்படம். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு 35 ஆயிரம் ரூபாய் செலவழித்து 'மகன்' என்றொரு குறும்படத்தை இயக்கினேன். விருது ஏதும் கிடைக்கவில்ல என்றாலும் தமிழ்நாடு திரைப்படக் கழகம் அதை 1.85 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது. இப்போது எடுத்த குறும்படம் யுடியூப் மூலமாக 5 லட்ச ரூபாயை வருமானமாகத் தந்துள்ளது. இதைப் பெருமைக்காக சொல்லவில்லை. குறும்படங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது," என்கிறார் பாண்டியராஜன்.
குறும்படம் இயக்குபவர்கள் ஏனோதானோ என்று செயல்படாமல் உண்மையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று குறிப்பிடுபவர் முன்பு போல் நமது படைப்புகளை வெளியிட பிறரது உதவி இனி தேவையில்லை என்கிறார்.
யுடியூப் போன்ற தளங்களில் வெளியிடும் படைப்புகள் தரமாக இருக்கும் பட்சத்தில் உலகம் முழுவதும் அவை சென்று சேரும் என்கிறார்.
"திரைப்பட இயக்கம் தொடர்பான அடிப்படை விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு படைப்பை இயக்குவதற்கான முக்கியமான அடிப்படை சூட்சுமங்களை மட்டுமே கற்றுத்தருகிறேன்.
"ஒரு படைப்பைத் திரையில் பார்க்கும்போது அந்தக் கதை புரிய வேண்டும். மனதில் உருவாகும் புதிய கதைக்கருவை விரிவுபடுத்த முடியுமா என்று நன்கு யோசியுங்கள். நாலு பேருடன் அமர்ந்து பேசும்போதுதான் கதை நகரும், வளரும். இணையம் வழி வகுப்புகள் எடுக்கும்போது எது குறித்தும் முதலில் குறைவாகத்தான் கற்றுக் கொடுப்பேன். பிறகு மாணவர்கள் அது தொடர்பாக கேள்விகள் கேட்க கேட்க அனைத்தும் விரிவடைந்துகொண்டே செல்லும்.
"மொத்தத்தில் நான் சொல்ல வரும் விஷயம் இதுதான். இயக்கம் தொடர்பான அடிப்படை விஷயங்களைக் கற்றுக்கொண்டால் போதும். குறும்படங்கள் எளிதில் கைவசமாகும். எதிர்காலம் நன்றாக இருக்கும்," என்று புன்னகைக்கிறார் பாண்டியராஜன்.
இவரது மூன்று மகன்களில் மூத்த மகன் பல்லவராஜன், கணினி தொழில்நுட்பத் துறையிலும் இரண்டாவது மகன் பிருத்வி, திரைப்பட நடிகராகவும் மூன்றாவது மகன் பிரேமராஜன், திரைத்துறையில் ஆளில்லா விமானத்தை இயக்குபவ ராகவும் பணியாற்றி வருகின்றனர்.

