ஊரடங்கு காரணமாக திரை அரங்குகள் திறக்கப்படாத நிலையில் 'ஓடிடி'யில் 12 தமிழ்ப் படங்கள் வெளியாக உள்ளன. அந்த வகையில் 'பொன்மகள் வந்தாள்', 'பெண்குயின்', 'டேனி', 'காக்டெயில்', 'லாக்கப்', 'ஆர்.கே.நகர்' என சில படங்கள் நேரடியாக 'ஓடிடி' தளங்களில் வெளியாகி உள்ளன. தொடர்ந்து அக்டோபர் 30ஆம் தேதி அமேசான் தளத்தில் சூர்யா நடித்திருக்கும் 'சூரரைப் போற்று' படம் வெளியாக உள்ளது.
மேலும் திரிஷாவின் 'பரம பதம் விளையாட்டு', 'கர்ஜனை', சித்தார்த்தின் 'டக்கர்', சந்தானத்தின் 'சர்வர் சுந்தரம்', 'டிக்கிலோனா', அமலா பால் நடித்திருக்கும் 'அந்த பறவைபோல' கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் 'மிஸ் இந்தியா', 'குட்லக் சகி', 'கைதி' படத்தின் வில்லன் அர்ஜூன் தாஸ் நடித்திருக்கும் 'அந்தகாரம்', ஆர்யாவின் 'டெடி', வைபவ் நடித்திருக்கும் 'காட்டேரி', ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதி நடித்திருக்கும்
'க/பெ ரணசிங்கம்' ஆகிய படங்கள் விரைவில் 'ஓடிடி'யில் வெளியாக உள்ளன.
விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா நடித்திருக்கும் 'சக்ரா' படமும் 'ஓடிடி'யில் வெளியிட பேச்சு வார்த் தை நடந்துகொண்டு இருக்கிறது.
இதற்கிடையில் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்வாதி கொலை வழக்கு சம்பவத்தை 'நுங்கப்பாக்கம்' என்ற பெயரில் படமாக்கியுள்ளனர். அரசியல் எதிர்ப்பு காரணமாக படம் தயாராக இருந்தும் பல மாதங்களாக வெளியாகாமல் இருந்தது. அதுவும் அக்டோபர் மாதத்தில் இணையத்தளத்தில் வெளியாக இருக்கிறது.
செப்டம்பர் 4ஆம் தேதி நானி, அதிதி நடித்திருக்கும் 'வி' படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சியில் நாயகி அதிதி ராவ் காணப்படவில்லை. அதனால் அவரது ரசிகர்கள் 'அதிதியை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்துவிட்டார்கள்," என்று பதிவிட்டனர். அதற்கு பதிலளித்த அதிதி, "பார்வையாளர்கள் படம் பார்க்கும்போது விறுவிறுப்பாக இருக்கும் என்பதால்தான் முன்னோட்டக் காட்சியில் என்னுடைய கதாபாத்திரம் இடம்பெறவேண்டாம் என்று அனைவரும் ஒருங்கிணைந்து முடிவெடுத்தோம்," என்று விளக்கியுள்ளார்.
இப்படி படங்கள் அனைத்தும் ஓடிடி பக்கம் சென்று கொண்டிருப்பதால், திரையரங்குகள் திறக்கப்படும்போது திரையரங்குகளில் வெளியிட படங்கள் இருக்குமா எனப் பலரும் அச்சப்படுகிறார்கள். இந்த நிலை நீடித்தால் திரையரங்குகள் பல மூடப்படும் வாய்ப்பு அதிகம் என்கின்றது கோலிவுட்.

