காதலருக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா

காதலருக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா

2 mins read
32bc65db-1e75-48fe-8191-662bee260298
விக்னேஷ் சிவன் தமிழ் திரைப்பட இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகம் கொண்டு தமிழ்த் திரையுலகில் பணியாற்றி வருகிறார். படம்: ஊடகம் -

திரைத்துறைக்கு வரும் இளவயது இயக்குநர்கள் ஆரம்பத்தில் இயக்குநராகிவிடவேண்டும் என்ற குறிக்கோளுடன் திரைத்துறையில் காலடி வைப்பார்கள். அவர்கள் எடுக்கும் படங்கள் நல்ல ஒரு பெயரைப் பெற்றுத் தந்ததும் ஏன் நாமே படத்தின் நாயகனாக நடிக்கக்கூடாது என்ற எண்ணம் வந்து, நாயகனாக நடிக்கத் தொடங்கிவிடுவார்கள். அதில் எஸ்.ஜே.சூர்யா ஓர் எடுத்துக்காட்டு.

அந்த வகையில் தற்பொழுது விக்னேஷ் சிவனுக்கும் நாயகனாக நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது. அதுவும் தான் நிஜ வாழ்க்கையில் காதலிக்கும் பெண்ணுக்கே ஜோடியாக நடிக்க வாய்ப்பு அமையும்போது அதை விட்டு வைப்பாரா?

விக்னேஷ் சிவன் தமிழ் திரைப்பட இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகம் கொண்டு தமிழ்த் திரையுலகில் பணியாற்றி வருகிறார்.

இவர் பல குறும்படங்களை இயக்கிய பிறகு 2012ஆம் ஆண்டு சிலம்பரசன் நடிப்பில் 'போடா போடி' திரைப்படத்தினை இயக்கி, இயக்குநராக தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார்.

அத்துடன் இவர் நடிகராக 2007ஆம் ஆண்டு வெளிவந்த 'சிவி' என்னும் திகில் திரைப்படத்தில் சொல்லப்படாத கதாபாத்திரம் ஒன்றில் சில காட்சிகளில் நடித்திருந்தார். பின்னர் 2014ஆம் ஆண்டு தனுஷ் நடித்த 'வேலை இல்லா பட்டதாரி' திரைப்படத்திலும் கூட்டத்தில் ஒருவராக வந்து சென்றார்.

அதனைத் தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் 2015ஆம் ஆண்டு 'நானும் ரௌடிதான்' திரைப்படத்தினை இயக்கி திரையுலகில் முன்னணி இயக்குநரானார். அந்தப் படத்திலிருந்து நயன்தாராவுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார்.

'காத்துவாக்குல இரண்டு காதல்' படத்தில் விஜய் சேதுபதிதான் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அந்தப் படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்க உள்ளார்கள். இவர்களில் விஜய் சேதுபதிக்கு யார் ஜோடியாக நடிக்க இருக்கிறார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வந்தது.

தற்பொழுது இந்தப் படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாகத்தான் நயன்தாரா நடிக்க இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இரண்டு படங்களில் சில காட்சிகளில் வந்து சென்ற விக்னேஷ் சிவன் இந்தப் படத்தில் இரண்டாவது நாயகனாக நடிக்க இருக்கிறார். இதனையடுத்து விஜய் சேதுபதிக்கு சமந்தாதான் ஜோடி என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டது.

இந்த படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் ஹைதராபாத்திலும் அதன்பின்னர் ஊட்டியிலும் நடைபெற இருக்கிறது. கொரோனா கெடுபிடி இல்லாமல் இருந்தால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்தக் காலக்கட்டத்தில் எதுவும் நிச்சயமில்லை என்று அனைவரும் அறிவர்.