தனுஷ், வெற்றி மீண்டும் கூட்டணி

தனுஷ், வெற்றி மீண்டும் கூட்டணி

2 mins read
ff03953b-8293-49b5-84ab-df8bb98a27a4
-

மீண்டும் வெற்றிமாறனுடன் இணைந்துள்ளார் தனுஷ். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதை அடுத்து தனுஷ் ரசிகர்கள் துள்ளிக் குதிக்கின்றனர்.

ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் படத்தில் இவர்கள் இருவரும் மீண்டும் கூட்டணி அமைக்கின்றனர். இதைத் தயாரிப்புத் தரப்பு உறுதி செய்துள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' படம் தனுஷ் நடிப்பின் மற்றோர் அபாரமான பக்கத்தை வெளிப்படுத்தியது. திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் அவரது நடிப்பை பாராட்டினர்.

தனக்கும் வெற்றிமாறனுக்கும் இடையே நல்ல புரிதலும் நட்பும் சகோதரப் பாசமும் நிலவுவதாக பல்வேறு பேட்டிகளில் தெரிவித்துள்ளார் தனுஷ். 'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'வடசென்னை' என இவர்கள் இருவரது கூட்டணியில் உருவான பெரும்பாலான படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன.

அதிலும் கடைசியாக வெளியீடு கண்ட 'அசுரன்' படம் இந்தக் கூட்டணியின் சந்தை மதிப்பைப் பெரிய அளவில் உயர்த்தியது.

இதையடுத்து வெற்றியும் தனுசும் மீண்டும் இணைய இருப்பதாகத் தொடர்ந்து தகவல் வெளியானது. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டும் வெளியாகவில்லை.

இந்நிலையில் ஒருவழியாக எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகும் படத்தில் இருவரும் இணைந்திருப்பது தனுஷ் ரசிகர்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.

இது 'வடசென்னை' படத்தின் இரண்டாம் பாகம் அல்ல என தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது. புதிய கதையுடன் களமிறங்குகிறார்களாம். திரைக்கதை உள்ளிட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மிக விரைவில் இப்படத்தின் நாயகி, இசையமைப்பாளர் உள்ளிட்ட மற்ற கலைஞர்களின் பங்கேற்பு குறித்து அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

இந்த முறையும் சமுதாயம் சார்ந்த ஒரு விஷயத்தைக் கையில் எடுக்கப் போகிறாராம் வெற்றிமாறன்.

விறுவிறுப்பான கதைக்களம், வழக்கம்போல் பரபரப்பான காட்சி அமைப்புகளுடன் இந்தப் படமும் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்க உள்ள படத்தையும் எல்ரெட் குமார்தான் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பை வெளிமாநிலங்களில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். கொரோனா கிருமி அச்சுறுத்தல் காரணமாக இந்தப் படத்துக்கான பணிகளை இப்போது தொடங்க வில்லையாம்.