சமூக வலைத்தளங்கள் இல்லை என்றால் இந்த ஊரடங்கு வேளையில் பொழுது போக்க முடியாமல் நடிகைகள் தவித்துப் போயிருப்பார்கள்.
தினந்தோறும் நடிகைகளின் காணொளிப் பதிவுகளால் இத்தளங்கள் நிரம்பி வழிகின்றன.
இந்நிலையில் 'அட்டகத்தி' நந்திதா ஸ்வேதா தனது புதிய சிகையலங்காரத்துடன் காட்சி அளிக்கும் காணொளியை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
சிகையலங்காரம் செய்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் முழுமையான காணொளித் தொகுப்பையும் அடுத்தடுத்து வெளியிடப் போகிறாராம். அதற்காக ஆவலுடன் காத்திருப்பதாக ரசிகர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
தற்போது 'ஐபிசி 376' என்ற படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் நந்திதா. இதில் பல அதிரடி சண்டைக்காட்சிகள் உள்ளன. அவற்றில் அசத்தலாக நடித்துள்ளார்.
'நம்பியதால் காயப்பட்டுள்ளேன்'
உண்மையாக காதலித்ததாலும் நம்பியதாலும் தாம் மனதளவில் காயப்பட்டிருப்பதாக கூறியுள்ளார் நடிகை லாஸ்லியா.
தற்போது 'ஃபிரண்ட்ஷிப்' படத்தில் நடித்து வரும் இவர் நடிகர் கவினை மனதில் வைத்தே இவ்வாறு கூறியிருப்பதாகப் பேசப்படுகிறது.
இருவரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றபோது காதல் வயப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து இன்ஸ்டகிராமில் லாஸ்லியா பதிவிட்டுள்ளார்.
"நான் வாழ்ந்தேன், காதலித்தேன், தொலைத்தேன், இழந்தேன், காயப்பட்டேன், நம்பினேன், தவறுகள் செய்தேன். ஆனால் அனைத்துக்கும் மேல் நான் நல்ல பாடம் கற்றுக் கொண்டேன்," என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் லாஸ்லியா.
இது கவினை மறைமுகமாகச் சாடும் பதிவு என்று ரசிகர்கள் பலர் தெரிவித்துள்ளனர். கவின் தரப்பில் இருந்து இதற்கு இதுவரை பதில் ஏதும் இல்லை. இந்நிலையில் நடிப்பில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தி வருவதாகச் சொல்கிறார் லாஸ்லியா.

