இந்தாண்டு 'பிக்பாஸ்' நிகழ்ச்சி நடக்க வாய்ப்பில்லை என்றும் அந்நிகழ்ச்சியை நடத்த தாம் அனுமதிக்கப் போவதில்லை என்றும் நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.
'பிக்பாஸ்' படப்பிடிப்புக்குத் தடை கோரி வழக்கு தொடுக்கப் போவதாக அவர் அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் மீராவும் பங்கேற்றுள்ளார். அச்சமயம் எடுக்கப்பட்ட ஒரு காணொளியை அவர் தம்மிடம் அளிக்கக் கோரியதாகவும் நிகழ்ச்சி தயாரிப்புத் தரப்பு அதற்கு உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தாம் குறிப்பிடும் காணொளிப் பதிவு தம் கைக்கு வரும்வரை 'பிக்பாஸ்' படப்பிடிப்பை நடத்தவிடப் போவதில்லை என்று கோபம் காட்டியுள்ளார் மீரா மிதுன்.
இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் காணொளி ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
"திருமண வீட்டில் சீப்பை ஒளித்து வைத்துக் கொண்டால் அந்நிகழ்வே நடக்காது என்பது போல் என்னுடைய ஒரே ஒரு காணொளிப் பதிவை மறைத்துவிட்டால் என்னுடைய தொழிலையே நிறுத்திவிடலாம் என்று கமல்ஹாசன் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.
"இதேபோல் செய்துகொண்டிருந்தால் நானும் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலை வரும். நான் நிச்சயம் அதைச் செய்வேன்," என்று மீரா மிதுன் அக்காணொளியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்தாண்டு தாம் பங்கேற்ற 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அளித்த ஒரு தீர்ப்பு மிகவும் தவறானது என்றும் ஆண்களுக்கு ஆதரவாக அவர் தீர்ப்பளித்தார் என்றும் மீரா மிதுன் சாடியுள்ளார்.
"ஓர் ஆண் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார். அதற்கு ஓர் ஆணாகிய நீங்கள் மற்றொரு ஆணுக்கு ஆதரவாகச் செயல்பட்டீர்கள்.
"இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது," என்று மேலும் தெரிவித்துள்ளார் மீரா மிதுன்.
ஏற்கெனவே நடிகர்கள் விஜய், சூர்யா குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறியுள்ளார் மீரா மிதுன்.
இதனால் அவர்களுடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

