வெற்றிகரமாக ஹாலிவுட்டில் கால் பதித்திருக்கிறார் ஜி.வி. பிரகாஷ்.
தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர் என்று அனுபவம் பெற்றிருப்பவருக்கு ஹாலிவுட்டில் நடிப்பது உற்சாகமளித்ததாம்.
தனது முதல் ஹாலிவுட் படமான கைபா பிலிம்ஸ் டெல் கே.கணேசன் தயாரிக்கும் 'ட்ராப் சிட்டி'யில் மருத்துவராக நடிக்கிறார் ஜிவி.
பிரபல நடிகர் ப்ராண்டன் டி ஜாக்ஸன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் தமிழ் நடிகர் நெப்போலியனும் கனமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் என்பது கூடுதல் சிறப்பம்சம்.
தமிழ் சினிமாவின் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள நெப்போலியன், 'டெவில்ஸ் நைட்' படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். அதில் அவரது நடிப்பு பரவலாகப் பேசப்பட்டது.
'டிராப் சிட்டி' ஹாலிவுட்டில் அவரது இரண்டாவது படம். 'கிறிஸ்துமஸ் கூப்பன்' என்ற இன்னொரு ஆங்கிலப் படத்திலும் அவர் நடிக்கவுள்ளார்.
மருத்துவராக நடித்தது வித்தியாசமான அனுபவத்தைத் தந்தது என்றும் தனது முதல் ஹாலிவுட் படத்தின் கதையும் கதாபாத்திரமும் தன்னை வெகுவாகக் கவர்ந்தது என்றும் சொல்கிறார் ஜி.வி. பிரகாஷ்.
சரி இப்படத்தின் கதை என்ன?
மிகவும் சிரமத்தில் உள்ள ராப் இசைப் பாடகர் ஒருவர் சூழ்நிலை காரணமாக ஒரு போதைப்பொருள் கடத்தல் தலைவனிடம் பணியாளாக வேலை செய்யவேண்டிய நிலை ஏற்படுகிறது.
பாடகராக நடிக்கும் ஜாக்சன் உருவாக்கும் ஒரு பாடல் அவரே எதிர்பாராத வகையில் பெரிய அளவில் வெற்றி பெறுகிறது.
இந்நிலையில் அவர் திடீரென போலிசாரால் கைது செய்யப்படுகிறார். இதன் காரணமாக அந்தப் பாடல் மென்மேலும் பிரபலமடைகிறது.
பின்னர் அமெரிக்காவில் நிகழும் ஒரு துப்பாக்கிச்சூடு காரணமாக அவர் தன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை மனதிற்கொண்டு சில முடிவுகளை எடுக்கவேண்டி வருகிறது.
"இப்படி நகரும் கதையில் ஒரு மருத்துவராக ஜி.வி. பிரகாஷ் ஏற்றுள்ள கதாபாத்திரம் சில முக்கிய திருப்பங்களில் முக்கிய பங்கு வகிக்குமாம். அதனால் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்ததாகச் சொல்கிறார் ஜ.வி.பிரகாஷ்.
'டிராப் சிட்டி' படத்தை இயக்கியிருப்பவர் ரிக்கி பர்செல். ஜாக்ஸன், நெப்போலியன், ஜிவி பிரகாஷ் தவிர எரிகா பிக்கெட், க்ளிஃப்டன் பாவெல், யுஹான் ஜோன்ஸ், டெனிஸ் எல்.ஏ.வொயிட், டாரினா படேல் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
அமெரிக்காவில் அண்மையில் நிகழ்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் சம்பவம், தமிழகத்தின் சாத்தான்குள காவல்நிலையத்தில் அரங்கேறிய துயரம் உள்ளிட்ட சம்பவங்களுடன் ஒத்துப்போகும் வகையில், இப்படத்தின் கதையோட்டம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள திரை யரங்குகளில் இப்படம் விரைவில் வெளியீடு காண உள்ளது.

