நடிகர் வடிவேல் பாலாஜியின் மறைவு சக நடிகர்களை, திரைக் கலைஞர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
குறிப்பாக அவருடன் நெருங்கிப் பழகிய சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், ராமர் உள்ளிட்டோர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
பாலாஜியின் சிரிப்பு என்றென்றும் தன் மனதில் நிலைத்திருக்கும் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
உடல்நலக்குறைவால் நேற்று காலமான பாலாஜி பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். இருவரது கூட்டணி தொலைக்காட்சி நேயர்களை வெகுவாகக் கவர்ந்தது.
"எனக்கும் பாலாஜிக்கும் இடையேயான உடல்மொழி நன்றாக இருப்பதாக பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். இருவரும் கூட்டணி அமைத்தால் கலகலப்பாக இருக்கும். ஒரு நிகழ்ச்சிக்காக ஒரேநாளில் நான்கைந்து பகுதிகள்கூட படமாக்கப்பட்டுள்ளன.
"ஆனால் நாள் முழுவதும் சலிப்படையாமல் சிரித்தபடியே காணப்படுவார் பாலாஜி. இப்படிச் செய்யலாம் என்று சுருக்கமாக விவரித்து ஒதுங்கி விடுவார் இயக்குநர். நாங்கள் இருவரும்தான் கலந்து பேசி அந்தப் பகுதிகளை விரிவாக்குவோம்.
"என்னதான் நடிகர் வடிவேலு சாரைப் போல் பாலாஜி நடிப்பதாகக் கூறப்பட்டாலும் மிகச் சரளமாகவும் இயல்பாகவும் வெளிப்படும் அவரது நகைச்சுவைக்கு நானும் ரசிகன். ஒரு காட்சி படமாகும்போதே திடீரென சில வசனங்களைப் பேசுவார். தன்னம்பிக்கையுடன் அவர் பேசுவது பலத்த வரவேற்பைப் பெறும்.
"எந்த மேடையாக இருந்தாலும் இதுபோன்ற திடீர் நகைச்சுவை வசனங்களால் ரசிகர்களை அவரால் சிரிக்க வைக்க முடியும். சில தினங்களுக்கு முன்பு திருமண நிகழ்வு ஒன்றில் அவரைச் சந்தித்தேன். அவரது சிரிப்பு என்றும் என் மனதில் நிலைத்திருக்கும்," என்று சிவகார்த்தியேன் தெரிவித்துள்ளார்.
'கோலமாவு கோகிலா' படத்தில் சிவகார்த்தியேன் மன்றத் தலைவராக நடித்திருந்தார் வடிவேல் பாலாஜி. இதற்கிடையே வடிவேல் பாலாஜியின் மறைவால் கடவுள்மீதுகூட சற்றே வருத்தம் ஏற்படுவதாக நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.
"என்னுடன் 19 ஆண்டுகள் பயணித்த கலைஞன். சின்னத்திரையில் முக்கியமான கலைஞன். வடிவேல் பாலாஜி மரணமடைந்த செய்தியைக் கேட்டு எனக்கு பேச்சு வரவில்லை. அதிர்ச்சியாக இருந்தது. எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் மேடையில் ஒரே ஆளாக அனைவரையும் கட்டிப்போட்டு சிரிக்க வைக்கக் கூடிய ஒரு அற்புதமான கலைஞன். மரணம் இப்படியெல்லாம் வருமா என்பதை பார்க்கும்போது கவலையாக இருக்கிறது," என்று கூறியுள்ளார் ரோபோ சங்கர்.
இதற்கிடையே, சிகிச்சை அளிக்க பணம் இல்லாமல் போனதுதான் வடிவேல் பாலாஜி மரணத்திற்கு காரணம் என கூறப்படுவதில் உண்மை இல்லை என அவரது குடும்பத்தினர் விளக்கம் அளித்திருக்கின்றனர்.
மேலும், மாரடைப்பு காரணமாக அவரது உடல் பாதி செயல்படாமல் போய்விட்டது என்றும் தனியார் மருத்துவமனையின் அலட்சியம் தான் பாலாஜியின் இறப்புக்கு காரணம் என்றும் சாடியுள்ளனர்.
"சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில்தான் பாலாஜிக்கு சிகிச்சை அளித்தோம். பாதி உடல் செயலிழந்ததால் பிசியோதெரப்பி சிகிச்சை அளித்தால் சில தினங்களில் குணமடைந்து விடுவார் என்றுதான் மருத்துவமனை நிர்வாகம் கூறியது.
"இந்தளவு மோசமான நிலையில் இருப்பதாகவோ, உயிரே போய்விடும் என்றோ சொல்லவில்லை," என்று அவரது குடும்பத்தார் கூறியதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
அதிகம் செலவு செய்து பல நாட்கள் சிகிச்சை அளித்த பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால்தான் பாலாஜி இறப்பதற்கு முன் அவரை அரசு மருத்துவமனைக்கு மாற்றியதாகவும் குடும்பத்தார் கூறியுள்ளனர்.
"சரியான சிகிச்சை அளித்திருந்தால் பாலாஜி உயிர் பிழைத்திருக்க வாய்ப்புண்டு," என அவரது நலன் விரும்பிகள் தெரிவித்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.