இது சூர்யா போட்ட பாதை

ஊரடங்கு தளர்வுகளின் இறுதிக்கட்டமாக தமிழக அரசு அனுமதி அளித்தாலும் திரையரங்குகள் திறக்கப்படுமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

காரணம், திரைப்படத் தயாரிப்பாளர்கள் தரப்பு முன்வைத்துள்ள நிபந்தனைகள்தான். இதேபோல் அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ள விதிமுறைகளும் திரையரங்க உரிமையாளர்களை மலைக்க வைத்துள்ளது.

ஒவ்வொரு காட்சிக்கும் 50 விழுக்காடு பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதிக்கப்பட வேண்டும், முகக் கவசம் அணிதல், பார்வையாளர்கள் ஒவ்வொருவருக்கும் வெப்பநிலையை சோதிப்பது, நாளொன்றுக்கு மூன்று காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி, ஒவ்வொரு காட்சிக்கும் இடையே குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேர இடைவெளி இருத்தல் என தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மேலும் ஒவ்வொரு காட்சியும் முடிந்ததும் திரை அரங்கை முழுமையாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும். முதல் காட்சியில் சமூக இடைவெளியைப் பின்பற்றி காலியாக விடப்படும் இருக்கைகளில்தான் அடுத்த காட்சிக்கு வருபவர்கள் உட்கார வைக்கப்பட வேண்டும் என்ற விதிமுறைகளும் உள்ளன.

இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் ஒருவேளை ஒப்புக்கொண்டாலும் தயாரிப்பாளர்கள் தரப்பும் தன் பங்கிற்கு சில நிபந்தனைகளை விதித்திருப்பது அவர்களை யோசிக்க வைக்கும்.

திரையரங்குகளில் தொழில்நுட்ப வசதி மூலம் படங்கள் திரையிடப்படுவதற்கு தயாரிப்பாளர்கள் செலுத்தும் சேவைக்கட்டணத்தை இனி செலுத்த இயலாது, திரையரங்குகளில் காட்டப்படும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் தொகையில் தங்களுக்கும் பங்கு வேண்டும், இணையம் மூலம் பதிவு செய்யப்படும் அனுமதிச்சீட்டுகள் வழி கிடைக்கும் தொகையில் பங்கு தர வேண்டும் என்பதெல்லாம் தயாரிப்புத் தரப்பில் வைக்கப்படும் நிபந்தனைகள்.

இதற்கு ஒப்புக்கொள்ள வாய்ப்பே இல்லை என்கிறது திரையரங்க உரிமையாளர் தரப்பு. இரு தரப்பும் மிக விரைவில் கூடிப் பேசி தீர்வு காணவில்லை என்றால் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் புதுப்படங்களை திரையிட வாய்ப்பில்லை என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.

இத்தகைய சூழலில்தான் ‘ஓடிடி’ எனப்படும் இணையம் வழி நேரடியாக படங்களை வெளியிடுவது குறித்து கோடம்பாக்கத்தில் அதிகம் பேசப்படுகிறது. ‘பொன்மகள் வந்தாள்’ படம் மூலம் இணையம் வழி படங்களை நேரடியாக வெளியிடும் நடைமுறைக்கு பாதை அமைத்துக் கொடுத்தது சூர்யாதான்.

இதையடுத்து ‘காக்டெயில்’, ‘லாக்கப்’ போன்ற குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியீடு கண்டன. இச்சமயம் தனது ‘சூரரைப் போற்று’ படம் இணையத்தில் நேரடியாக வெளியாகும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் சூர்யா. இது கோடம்பாக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து பல முன்னணி நடிகர்களின் புதுப்படங்களை வாங்க இணைய நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதன் பலனாக சில படங்களின் வெளியீட்டு உரிமை இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்.

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் ‘க.பெ ரணசிங்கம்’, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘கடைசி விவசாயி’ ஆகியவை இணையத்தில் நேரடியாக வெளியாகின்றன.

அதர்வாவை வைத்து ஆர்.கண்ணன் இயக்கியிருக்கும் ‘தள்ளிப்போகாதே’ படமும் சந்தானத்தை வைத்து எடுத்த ‘பிஸ்கோத்’ படமும் இணையத்தில் வெளியாக உள்ளன.

இதேபோல் சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ படமும் சிம்புதேவன் இயக்கியிருக்கும் ‘கசட தபற’ படமும் இப்பட்டியலில் இடம்பெறும் என்கிறார்கள். விஷாலின் ‘சக்ரா’ படம் இணையத்தில்தான் வெளியாகிறது. ‘ஜகமே தந்திரம்’, ‘பூமி’ ஆகிய படங்களை வாங்குவதற்கு பெரிய போட்டி இருந்ததாகவும் ஆனால் தயாரிப்பாளர்கள் இதனை திரையரங்கில் வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அக்டோபர் மாதம் தமிழகத்தில் திரையரங்குகளைத் திறக்க வாய்ப்புள்ளதாகவும் இதற்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகக்கூடும் என்றும் ஒரு தகவல் உலா வருகிறது.

திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்பில்லை என்று கருதி தங்கள் படங்களை இணையத்தில் நேரடியாக வெளியிடத் திட்டமிட்டிருந்தனர் சில தயாரிப்பாளர்கள். ஆனால் தற்போதைய நிலையைக் கவனத்தில் கொண்டு, சற்றே காத்திருந்து திரையரங்குகளிலேயே படத்தை வெளியிடலாம் என அவர்கள் யோசிக்கின்றனர். மொத்தத்தில் கொரோனா கிருமி விவகாரத்தால் தமிழ்த் திரையுலகில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!