தமக்கு அம்மா கதாபாத்திரங்களில் நடிக்கும் அளவுக்கு வயதாகிவிடவில்லை என்கிறார் சோனியா. அவ்வாறு நடிக்கக் கேட்டு தன்னை அணுகுபவர்களுக்குச் சரியான பதிலடி கொடுக்கிறாராம்.
"திரிஷா, நயன்தாராவுடன் நானும் கடந்த 1982-83களில்தான் சினிமாவில் அறிமுகமானேன். அவர்கள் இருவரும் இன்னும்கூட கதாநாயகிகளாகத்தான் நடிக்கின்றனர். ஆனால், என்னை மட்டும் வயதான கதாபாத்திரங்களில் நடிக்க முடியுமா என்று கேட்கிறார்கள்.
"இதே கேள்வியை அவர்கள் இருவரிடம் கேட்பார்களா? ஒருவேளை நான் பார்ப்பதற்கு வயதானவளாகக் காட்சியளித்தால்கூட பரவாயில்லை. என் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன்," என்று ஆதங்கப்படும் சோனியா அகர்வால், தற்போது திருமணச் சேவைகள் தொடர்பான நிறுவனம் ஒன்றைத் துவங்கியுள்ளார்.
இதில் அவருடன் பிரபல ஆடை வடிவமைப்பாளர் சிட்னி ஸ்லேடனும் நெருக்கமான தோழி ஒருவரும் இணைந்துள்ளனராம்.
"முதலில் நானும் எனது தோழி பிரியாவும்தான் இம்முயற்சியில் இறங்கினோம். அதன்பிறகுதான் சிட்னி இணைந்தார். திருமணத்தில் மணமக்களின் ஆடைகளுக்கு எப்போதுமே முக்கியத்துவம் அளிக்கப்படும்.
"ஊரடங்கின்போது நடக்கும் திருமணங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ள நிலையில் இப்படி ஒரு முயற்சி தேவையா, பலனளிக்குமா? எனும் கேள்வி எழுவது இயல்புதான்.
"திருமணம் ஒருவரது வாழ்க்கையில் முக்கியமான ஓர் அனுபவம், நிகழ்வு. அசாதாரணமான சூழ்நிலையில் திருமணத்தைப் பிரமாண்டமாக ஆசைப்பட்டபடி நடத்த இயலாமல் போகலாம். திருமண வைபவத்துக்கு 50 பேரோ அல்லது நூறு பேரோ வரக்கூடும். ஆனாலும் அதற்கான முக்கியத்துவம் குறைந்துவிடாது.
"அதனால்தான் மணமக்களின் ஆடை அலங்காரத்துக்கான முக்கியத்துவமும் இப்போது வரை நீடித்து வருகிறது. அவரவர் வசதிக்கேற்ப வெவ்வேறு விலைகளில் எங்களிடம் திருமண ஆடைகள் கிடைக்கும்," என்கிறார் சோனியா.
மேலும், திருமணம் தொடர்பான இதர சேவைகளையும் இவரது நிறுவனம் வழங்குமாம். தற்போது விளம்பரங்களிலும் நடித்து வருகிறார் சோனியா. மேலும் பெயரிடப்படாத தமிழ்ப் படத்திலும் இரண்டு இணையத் தொடர்களிலும் ஒப்பந்தமாகி உள்ளார்.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் 'குயின்' இணையத் தொடரின் இரண்டாம் பாகத்திலும் இவர் நடிப்பது உறுதியாகி உள்ளது.
"பல தருணங்களில் ஜெயலலிதா அம்மாவைப் பார்த்து பிரமித்திருக்கிறேன். இந்தத் தொடரில் நடிக்க மிகுந்த தயக்கத்துடன்தான் ஒப்புக்கொண்டேன். ஆனால் நடிக்கும்போதுதான் அவரது வாழ்க்கையில் எதிர்கொண்ட சிரமங்களும் வலிகளும் தெரியவந்தன.
"இதனால் அவர் மீதான மரியாதை மேலும் அதிகரித்துள்ளது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு துவங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்று சொல்லும் சோனியாவுக்கு இன்றுவரை தமிழில் பிடித்தமான படம் '7ஜி ரெயின்போ காலனி'தானாம்.
மறுபதிப்பு செய்யப்படும் பட்சத்தில் இப்படத்தில் இவர் ஏற்று நடித்த அனிதா கதாபாத்திரத்துக்குத் தற்போது கீர்த்தி சுரேஷ்தான் பொருத்தமாக இருப்பார் என்கிறார்.
இயக்குநர் செல்வராகவனைத் திருமணம் செய்துகொண்டு பின்னர் விவா கரத்தும் செய்து சில ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தமக்கென ஒரு குடும்பம் வேண்டும் என விரும்புகிறாராம் சோனியா.
எனவே, மீண்டும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளாராம்.
"நிச்சயமாக மீண்டும் திருமணம் செய்வேன். எனினும் இம்முறை மிகுந்த கவனத்துடன் முடிவெடுக்க வேண்டும். இப்போதுவரை நான் தனித்துதான் வாழ்கிறேன். என் வாழ்க்கையில் வேறு யாரும் இல்லை," என்பவர், நடிப்பு, சொந்த நிறுவனத்தை வழிநடத்துவது, எதிர்காலத் திட்டங்களில் கவனம் செலுத்துவது என்று வாழ்க்கை இப்போதும் பரபரப்பாகவே இருப்பதாகச் சொல்கிறார்.
கதை, திரைக்கதை எழுதுவது, சிறிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, திறமையுள்ள புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது என இவரிடம் மேலும் பல திட்டங்கள் கைவசம் உள்ளனவாம்.

