விஜய்யுடன் மீண்டும் தமன்னா

3 mins read
93c81bd1-a9ed-4662-8b96-5c9a79f16d4b
படம்: ஊடகம் -

தமன்னா 'அந்தாதூன்' படத்தின் தெலுங்கு மறுபதிப்பில் தபுவின் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் இந்தியில் வெளியான திரைப்படம் 'அந்தாதூன்'. ஆயுஷ்மான் குரானா கண் தெரியாத பியானோ இசைக் கலைஞராக இந்தப் படத்தில் நடித்திருந்தார். வயதான ஒரு நடிகரை அவரது மனைவியும் அவரின் காதலரும் கொலை செய்வதை ஆயுஷ்மான் பார்த்துவிட, இதைத் தொடர்ந்து நடக்கும் சுவாரசியத் திருப்பங்களே இந்தப் படம்.

2018ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்துக்கு சிறந்த இந்தி படம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர் ஆகிய மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன. 'அந்தாதூன்' தமிழ், தெலுங்கு மொழிகளில் மறுபதிப்பு செய்யப்படவுள்ளது. இதில் தெலுங்குப் பதிப்பில் ஆயுஷ்மான் கதாபாத்திரத்தில் நிதின் நடிக்கிறார்.

இந்தியில் தபு நடித்திருந்த வில்லி வேடத்தில் நடிக்க நயன்தாராவை அணுகினர். அவர் பல கோடிகள் சம்பளம் கேட்டதால் வேறு நடிகையைத் தேடினர். நதியா, ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் பரிசீலனையில் இருந்தனர். இறுதியாக தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். முதல் தடவையாக இந்த படத்தில் தமன்னா வில்லி வேடம் ஏற்கிறார்.

இந்தப் படம் பற்றிப் பேசியுள்ள தமன்னா, "நான் தபுவின் நடிப்புக்கு என்றுமே பெரிய ரசிகையாக இருந்திருக்கிறேன். அவர் நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்குக் கிடைத்த கௌரவம். 'அந்தாதூன்' திரைப்படம், பார்வையாளர்களின் மீது மனோரீதியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய படம். அந்தத் திரைக்

கதையில் நாயகனும் இல்லை, வில்லனும் இல்லை.

"இந்தப் படத்தில் நடிகர்கள் தேர்வு வழக்கத்துக்கு மாறானதாக இருந்தது. எனது கதாபாத்திரம் வில்லத்தனமாக இருக்கும். என்னை படத்தில் புதிதாக பார்ப்பீர்கள். சுவாரசியமாக அதே சமயம் இருண்ட பக்கத்துக்குப் போகும் ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன். வழக்கத்தை மீறுவதில் பயமில்லாமல், அதிக சுவாரசியத்தைத் தரும், தனித்துவத்தோடு இருக்கும் திரைப்படங்களை நான் அதிகம் நேசிக்கத் தொடங்கி இருக்கிறேன்.

"நிதினுடன் நான் முதல் முறையாக நடிக்கப் போகிறேன். தெலுங்குத் திரையுலகில் நான் இணைந்து நடித்திராத ஒரு சிலரில் அவரும் ஒருவர். எனவே மிகவும் ஆர்வத்துடன் படப்பிடிப்புக்காகக் காத்திருக்கிறேன்," என்று கூறியுள்ளார்.

'அந்தாதூன்' திரைப்படத்தின் தமிழ் மறுபதிப்பை மோகன் ராஜா இயக்க, தியாகராஜன் தயாரிக்க, பிரசாந்த் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமன்னா மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர இருப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது என்று கூறியிருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து விஜய் மறுபடியும் ஏஆர் முருகதாஸுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 65' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கின்றது. அநேகமாக இந்தப் படம் 'துப்பாக்கி' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தான் மீண்டும் விஜய்யுடன் ஜோடியாக நடிக்கும் நாளை பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருந்ததாகவும் அந்த ஆசை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற இருப்பதாகவும் கூறினார் தமன்னா. இருவரும் 2010ஆம் ஆண்டு வெளியான 'சுறா' படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

இந்தப் படம் குறித்த அறிவிப்பு 2021 பொங்கல் சமயத்தில் வெளியாகலாம் என்றும் 2021 பிப்ரவரி முதல் பட வேலைகள் ஆரம்பிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்