சேரன்: க/பெ. ரணசிங்கம் படத்தின் பலமும் பலவீனமும்

சேரன்: க/பெ. ரணசிங்கம் படத்தின் பலமும் பலவீனமும்

2 mins read
e0cee202-fe1d-4f2a-99f7-0c8574153824
படம்: தமிழக ஊடகம் -

அறிமுக இயக்குநர் பி.விருமாண்டி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதி நடித்துள்ள 'க/பெ ரணசிங்கம்' திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி 'ஓடிடி'யில் வெளியானது. வெளிநாட்டில் இறந்துபோன கணவனின் உடலை மீட்டு, சொந்த ஊருக்கு கொண்டுவர போராடும் பெண்ணின் கதை தான் 'க/பெ ரணசிங்கம்'.

முதல் படத்தையே நேர்த்தியாக உருவாக்கியுள்ள பி.விருமாண்டியைப் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்தவகையில், இயக்குநர் சேரன், "மண்ணையும் மக்களின் முக உணர்வுகளையும் அச்சு அசலாக பதிவு செய்ததில் இயக்குநரும், மக்களின் மொழியில் உயிரையும் சுவாசத்தையும் பேச வைத்ததில் தம்பி சண்முகமும் அசுர வெற்றியை அடைந்திருக்கிறார்கள்.

"எடுத்துக்கொண்ட கதையும் களமும் மக்களின் வாழ்வியலையும் அரசியலையும் பேசுவதால் தவிர்க்க இயலாத படமாக என்றும் நிற்கும். படத்தின் இறுதிக்காட்சிதான் முகத்தில் அறைகிறது. மக்களைத் திசை திருப்ப அரசியல் எதுவேண்டுமானலும் செய்யும் என சொல்கிறது. அதுவே படத்தின் பலம். படத்தின் நீளம் அதிகம் என்பது பலவீனம்," என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் படம் முழுவதும் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், "இந்த படத்தின் கதையைக் கேட்டவுடன், கண்டிப்பாக இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். எனது திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படம் இது. கொரோனா மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் திரையரங்கில் இந்தப் படம் கொண்டாடப்பட்டு இருக்கும்.

"படத்திற்கு கிடைத்த விமர்சனங்களைப் பார்த்தேன். அவை அனைத்தையும் என் இதயத்தின் ஓரத்தில் வைத்துக்கொண்டு, தொடர்ச்சியாக நல்ல படங்களில் நடித்து வருகிறேன். படத்தில் அரியநாச்சி கதாபாத்திரம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம், பார்வையாளர்கள் மனதிலும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அரியநாச்சியைப்போல் எத்தனையோ பேர் இங்கு வாழ்கிறார்கள். இப்படத்தின் வெற்றியை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்,'' என தெரிவித்துள்ளார்.