‘உங்களுக்கு வெட்கமாக இல்லையா விஜய் சேதுபதி?’: சமூக ஊடகங்களில் தீயாய் பரவும் கேள்வி

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கும் திரைப்படத்தில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார் என்பது பலரும் அறிந்ததே. தற்பொழுது இந்த விஷயம் பூதாகாரமாக வெடித்து இருக்கிறது.

பலரின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் அந்தப் படத்தில் நடிக்க மாட்டார் என்றே பலரும் எண்ணினர். அவரின் நண்பரும் இயக்குநருமான சீனு ராமசாமி கூட அவ்வாறுதான் நினைத்து இருந்தார்.

ஆனால் நேற்று அவர் முத்தையா முரளிதரனைப் போல முடி வெட்டிக்கொண்டு அவரைப்போலவே காட்சியளிக்கும் விளம்பரப் படத்தை வெளியிட்டு இருந்தார்.

மேலும் `ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் கொன்று குவித்த நாடான இலங்கையின் தேசியக் கொடி கொண்ட கிரிக்கெட் சட்டையை அணிந்துகொண்டு கிரிக்கெட் வீரர்கள் அவரைத் தூக்கிக்கொண்டு இருக்கும்படியான படத்தையும் வெளியிட்டு இருந்தார்கள்.

பலரின் வேண்டுகோள்களை நிராகரித்து எவ்வாறு விஜய் சேதுபதி இவ்வாறு முடிவு எடுக்கலாம் என்று கேள்விகளை எழுப்பி இணையவாசிகள் பலரும் கடுமையான விமர்சனங்களையும் எதிர்ப்பையும் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே விஜய் சேதுபதிக்கு டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்திருப்பது, தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுபற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு கூறுகையில், “இனத் துரோகியான முரளிதரனின் கதாபாத்திரத்தில், தமிழ் மக்களால் பெரிதும் நேசிக்கப்படும், மிகச் சிறந்த நடிகரான விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கோரிக்கை.

“இங்கு நடக்கும் சாதி, ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பவர் விஜய் சேதுபதி.

“முத்தையா முரளிதரன் ஒரு இனத் துரோகி, விஜய் சேதுபதி ஒரு இனப் பற்றாளர். எனவே, அவர் முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது ஏற்புடையதல்ல.

“விஜய் சேதுபதி, முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதென்பது இன துரோகத்துக்கு ஆதரவாக, உறுதுணையாக இருக்கக்கூடும் என்பதனாலும் அவர்மீது உள்ள அக்கறையினாலும்தான் நாங்கள் இந்தப் படத்தில் அவர் நடிக்கக் கூடாது என்கிற கோரிக்கையை வைக்கிறோம்.

“அதுமட்டுமல்லாமல் இந்தப் படம் வெளியாவதன் மூலம், இனப் படுகொலை நடந்த ஒரு மண்ணில், `இப்படிப்பட்ட தமிழரை நாங்கள் அடையாளப்படுத்தியுள்ளோம்’ என்று இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் தங்களுக்கான பெருமையாக இதனை மாற்றிக்கொள்வார்கள்.

அவர்களின் பெருமைக்கு விஜய் சேதுபதி ஆதரவாக இருக்கிறாரா என்பதுதான் எங்கள் கேள்வி.

“விஜய் சேதுபதியை எச்சரிக்கிறோம்’ என்றெல்லாம் நாங்கள் சொல்லவில்லை. சகோதரர் விஜய் சேதுபதியிடம், `இந்தப் படத்திலிருந்து விலகிவிடுங்கள்’ என்று அன்பான வேண்டுகோளைத்தான் முன் வைக்கிறோம். இது வி.சி.க.வின் கோரிக்கை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கை.

“வெளிநாடுகளில் உள்ள தமிழர்களின் கோரிக்கையும் இதுவாகத்தான் உள்ளது. ஒருவேளை இந்தப் படம் வெளியானால், அதனை வெளிநாடுகளில் நாங்கள் திரையிடமாட்டோம் என்றும் கூறி வருகின்றனர்.

“தமிழ் மக்களின் உணர்வுகளையும் வலியையும் விஜய் சேதுபதி புரிந்துகொள்வார்,” என்று கூறினார்.

‘உங்களுக்கு வெட்கமாக இல்லையா விஜய் சேதுபதி?’ என நேற்று டுவிட்டரில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதனால் ‘ஷேம் ஆன் விஜய்சேதுபதி’ என்ற ‘ஹேஷ்டாக்’ இணையத்தில் வலம் வருகிறது. கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் இந்த ‘ஹேஷ்டாக்’கை மீண்டும் டுவீட் செய்துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!