'தளபதி 65' குறித்துப் பல்வேறுவிதமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. கூட்டிக் கழித்துப் பார்த்தால் அப்படத்தின் இயக்குநராக முடிவு செய்யப்பட்டிருந்த ஏ.ஆர்.முருகதாஸ் அதிலிருந்து விலகிவிட்டார் என்பது மட்டும் உறுதியாகி உள்ளது.
அப்படியானால் அதே படத்தில் பணியாற்ற இருந்த இசையமைப்பாளர் தமனின் கதி?
அதில் குழப்பமில்லை. தமன்தான் இசையமைப்பாளர் என்பதில் விஜய் உறுதியாக உள்ளாராம். முன்னதாக முருகதாஸ் சொன்ன கதைக்கேற்ப விஜய்க்கான அறிமுகப் பாடலுக்கு தமன் அமைத்து இருந்த மெட்டு விஜய்யை வெகுவாகக் கவர்ந்துவிட்டதாம்.
அதனால் அடுத்து யார் இயக்கத்தில் நடித்தாலும், எந்தக் கதையாக இருந்தாலும் இதுதான் அறிமுகப் பாடல் என விஜய் முடிவு செய்துவிட்டதாகத் தகவல்.
'தளபதி 65' படத்துக்காக முருகதாஸ் சொன்ன கதை விஜய்க்கும் தயாரிப்புத் தரப்புக்கும் பிடிக்கவில்லை என்பதுதான் உண்மையாம். கதையில் அரசியல் நெடி அறவே இல்லை என்பதுதான் இருதரப்பையும் யோசிக்க வைத்திருக்கிறது. எனவே, சில மாற்றங்களைச் செய்யும்படி தயாரிப்புத் தரப்பு முன்வைத்த கோரிக்கையை முருகதாஸ் ஏற்கவில்லை என்றும், அதனால்தான் அவர் இப்படத்தில் இருந்து விலக நேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
"முன்னதாக முருகதாசுக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருந்தது. பின்னர் படத்தின் தயாரிப்புச் செலவை குறைத்த கையோடு இயக்குநரின் சம்பளத்திலும் 20 விழுக்காடு குறைக்கப்படும் என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
"தொடக்கத்தில் சற்றே அதிருப்தி அடைந்தாலும் பிறகு இந்த ஏற்பாட்டுக்கு அவர் ஒப்புக்கொண்டார். பின்னர் கதையிலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றபோது அவருக்கு அதில் உடன்பாடு இல்லாமல் போனது," என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.
இப்போது தளபதி 65 இயக்குநர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இயக்குநர் வெற்றிமாறனை தயாரிப்புத் தரப்பு அணுகியபோது அவர் மூன்று தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளதால் விஜய்யுடன் இணைய வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
இயக்குநர் மகிழ்திரு மேனி, உதயநிதி நடிக்கும் படத்தை இயக்குவதால் அவர் விஜய்யிடம் ஏற்கெனவே சொல்லியிருந்த மூன்று கதைகளும் தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இதற்கிடையே விஜய்யை வைத்து ஏற்கெனவே 'சிவகாசி' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய பேரரசு கூறிய புதுக்கதை பிடித்துப் போனதால் அடுத்து அவரது இயக்கத்தில்தான் விஜய் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது எனத் தெரியவந்துள்ளது.
விஜய்க்காக தாம் இரு கதைகளை எழுதியிருப்பது உண்மைதான் என்றும் அந்தக் கதைகள் விஜய்க்காக காத்திருப்பதாகவும் சொல்கிறார் பேரரசு. எனினும் அண்மைக் காலத்தில் விஜய்யைத் தாம் சந்திக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளார்.
முருகதாஸ் விலகியதை அடுத்து பல இயக்குநர்கள் விஜய்யை அணுக முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அவர் யாருக்கும் பிடிகொடுப்பதாக இல்லை. 'மாஸ்டர்' படம் வெளியீடு கண்ட பிறகே கதை கேட் கவும், இயக்குநர்களைச் சந்திக்கவும் அவர் முடிவு செய்திருப்பதாகத் தகவல்.
இந்நிலையில் அடுத்த கதையையும் இயக்குநரையும் முடிவு செய்யாமல் போனதால் விஜய் மிகுந்த ஏமாற்றத்தில் இருப்பதாக வெளியான தகவலை அவரது தரப்பு மறுத்துள்ளது. அவர் வழக்கம் போல் உற்சாகமாக பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

