தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலாஜி: யாரையும் நான் தாக்கவில்லை

2 mins read
be7d7e65-e6f6-44aa-a88f-427e3782c67a
-

'மூக்குத்தி அம்மன்' படம் நிச்சயம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் என்கிறார் அதன் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி.

இந்தப் படம் தமக்குப் பல விஷயங்களைப் புரிய வைத்திருப்பதாகவும் கூறுகிறார்.

"இந்தப் படத்தில் அரசியல் நெடி அதிகம் இருப்பதாக ஒரு விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பிட்ட ஒரு தரப்பை நான் குறிவைத்துத் தாக்குவது போல் காட்சிகள் சித்திரிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். அது உண்மையல்ல. நான் இடது, வலது, நடுநிலை என்று எந்தப் பக்கமும் இல்லை. எதையும் மனதில் வைத்துக்கொண்டு நானும் எனது நண்பரும் இணைந்து இந்தப் படத்தை இயக்கவில்லை," என்கிறார் பாலாஜி.

'எல்.கே.ஜி.' படத்துக்குப் பிறகு அடுத்து ஒரு மாறுபட்ட கதையை இயக்கவேண்டும் என்றுகூட தாம் திட்டமிடவில்லை என்று குறிப்பிடுபவர், அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குக்குச் சென்று பார்க்கக்கூடிய வகையில் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்பது மட்டுமே தமது விருப்பமாக இருந்தது என்கிறார்.

"முன்பெல்லாம் பண்டிகைக் காலங்களில் குடும்பமாகத் திரையரங்குக்குச் செல்வோம். கே.எஸ். ரவிகுமார், சங்கர் போன்ற பெரிய இயக்குநர்களின் படங்களைப் பார்க்க திரையரங்கு செல்லும்போது எவ்வளவு உற்சாகமாக இருக்கும் தெரியுமா?

"ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் விரிவாகக் காட்சிப்படுத்தி நம்மை அசத்துவார்கள். ஆனால் இப்போது உருவாகும் திரைப்படங்கள் எல்லாமே 'சீரியஸ்' வகைப் படங்களாக உள்ளன. அதனால்தான் ஜாலியாக குடும்பங்கள் கொண்டாடக்கூடிய படமாக ஒரு படைப்பை உருவாக்கி உள்ளேன்," என்கிறார் பாலாஜி.

கடவுள் நேரில் வந்தால் சாமானியர்கள் உட்பட அனைவரும் அவரிடம் கேட்கக்கூடிய கேள்விகளை படத்தில் கேட்டிருக்கிறாராம். தம்மைப் பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியாகும் எதிர்மறை விமர்சனங்களைக் கண்டுகொள்வதில்லை என்கிறார்.