பத்ரி வெங்கடேஷ் இயக்கும் 'வெரலு' படத்தில் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார் கௌதம் கார்த்திக். இது முழுநீள அடிதடி படமாக உருவாக உள்ளதாம்.
கௌதம் கார்த்திக்கைத் தமக்கு ரொம்பப் பிடிக்கும் என்றும் அவரை வைத்து ஒரு படம் இயக்கவேண்டும் என்பது தமது நீண்டநாள் விருப்பமாக இருந்தது என்றும் சொல்கிறார் பத்ரி.
இவர் இதற்கு முன்பு 'பாணா காத்தாடி', 'செம போத ஆகாத' ஆகிய படங்களை இயக்கியவர். அடுத்து ரியோ, ரம்யா நம்பீசன் வைத்து 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்தை இயக்கி முடித்துள்ளார்.
"இந்தாண்டு துவக்கத்தில் அந்தப் படம் வெளியாகி இருக்கவேண்டும். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியீடு தள்ளிப்போய் விட்டது. இடைப்பட்ட நேரத்தில் சும்மா இருக்காமல் புதுக்கதையைத் தயார் செய்தேன். அதில் நடிக்க கௌதம்தான் பொருத்தமான நாயகன் என்று தோன்றியது. அதனால் அவரை ஒப்பந்தம் செய்துள்ளோம்," என்கிறார் பத்ரி.
'பிளான் பண்ணிப் பண்ணனும்' படத்தின் தயாரிப்பு நிறுவனமே 'வெரலு' படத்தையும் தயாரிக்க உள்ளது. கதையைக் கேட்டதும் எந்தவிதத் தயக்கமுமின்றி நடிக்க ஒப்புக்கொண்டாராம் கௌதம். சென்னைதான் கதைக்களமாம்.
முழுக் கதையும் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் நடைபெறுகிறது. சண்டைக்காட்சிகளை ஹாலிவுட் தரத்துக்குப் படமாக்க உள்ளனராம்.
"கௌதம் கார்த்திக்கை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இயக்குநரின் எண்ணத்துக்கு ஏற்ப, நடிக்கக்கூடிய ஒருசில நடிகர்களில் இவரும் ஒருவர். எனது முதல் படம் முழுநீள காதல் கதை. இரண்டாவது படம் திகில் வகையைச் சார்ந்தது. அடுத்து நகைச்சுவையில் கவனம் செலுத்தினேன்.
"இப்போது ஆக்ஷன் படத்தை உருவாக்க உள்ளேன். இது எனக்கு முற்றிலும் புதிய, மாறுபட்ட களம். எனவே நிச்சயம் சவாலாக இருக்கும். எனினும் கௌதம் போன்ற இளமையான, திறமையுள்ள கதாநாயகர்களை நம்பி தைரியமாகக் களமிறங்கலாம். அந்த நம்பிக்கையில்தான் பட வேலைகளைத் துவங்கி உள்ளேன்," என்கிறார் பத்ரி வெங்கடேஷ்.
படத்தின் நாயகன் கௌதம் கார்த்திக்கிடமும் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. மிக விரைவில் படப்பிடிப்பைத் துவங்க உள்ளனர் என்பதே இதற்குக் காரணம்.
"டிசம்பர் முதல் வாரத்தில் எனக்கான காட்சிகள் படமாக்கப்படும் என நினைக்கிறேன். மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்பது நிச்சயம் மகிழ்ச்சி தரும் விஷயம்தான். ஆறு மாதங்களாக கேமரா முன்னால் நிற்காதது எதையோ இழந்துவிட்ட உணர்வை ஏற்படுத்தி உள்ளது," என்கிறார் கௌதம்.
'வெரலு' என்பது இவரது கதாபாத்திரத்தின் பெயராம். அதாவது எல்லோருடைய கண்களிலும் விரலை விட்டு ஆட்டுபவன் என விளக்கம் தருகிறார்.
"என்னை நம்பி மிகப்பெரிய பட்ஜெட்டுடன் கறமிறங்குகிறார் இயக்குநர் பத்ரி. அதனால் எனக்கான பொறுப்பு மேலும் அதிகரித்துள்ளது. எல்லோர் கண்களிலும் விரலை விட்டு ஆட்டும் நாயகனைச் சிலர் குறிவைத்துத் துரத்துகிறார்கள். நாயகன் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நாயகன் எவ்வாறு பதிலடி கொடுக்கிறான் என்பதுதான் கதை. இதை மிகுந்த விறுவிறுப்புடன் காட்சிப்படுத்த உள்ளனர்.
"நான் ஏற்கெனவே அடிதடிப் படங்களில் நடித்திருக்கிறேன். அவற்றைவிட இதில் எனது கோபமும் அதிரடியும் கூடுதலாகவே இருக்கும்.
"அதற்காக பஞ்ச் (அதிரடி) வசனங்கள் அதிகமாக இருக்கும் என யூகிக்க வேண்டாம். குறைவாகத்தான் பேசுவேன். சண்டைக் காட்சிகளும் யதார்த்தத்தை மீறாத அளவில்தான் இருக்கும். மொத்தத்தில் இந்தப் புதிய குழுவிடம் இருந்து பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு நல்ல படத்தை எதிர்பார்க்கலாம்," என்கிறார் கௌதம் கார்த்திக்.
இப்படத்தின் நாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. சில முன்னணி நாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மிக விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகுமாம்.
சண்டைக்காட்சிகளில் நடிப்பதற்காக கௌதம் சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

